Published : 27 Dec 2020 03:19 PM
Last Updated : 27 Dec 2020 03:19 PM

பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு; பாதிப்பு குறித்து ரகசியமாகப் புகார் அளிக்கும் வகையில் தனித்துறை அமைப்பேன்: ஸ்டாலின் உறுதி

அமையவுள்ள திமுக ஆட்சியில், பெண் குழந்தைகள் மட்டுமின்றி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மாவட்ட ரீதியாகத் தனி நீதிமன்றம் அமைக்கப்படும். தைரியமாகப் புகார் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் ரகசியப் பிரிவு ஒன்று மாநில அளவில் உருவாக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

''இன்று “தி இந்து” ஆங்கில நாளிதழின் நான்காவது பக்கத்தில், “And, they all fall down” என்ற முழுப்பக்கக் கட்டுரை - சென்னை மாநகரத்தில் 13 வயதே நிரம்பிய பெண் குழந்தையின் பிஞ்சுப் பருவம் கொடூரமாகச் சூறையாடப்பட்டதை விளக்கியுள்ளதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இதயம் படபடக்கும் - கண்கள் குளமாகி விடும்.

அப்படியொரு சமூகச் சீரழிவு தலைநகர் சென்னையில் நடைபெற்றுள்ளது. வடசென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில் உறவினர்களின் துணையோடு சின்னஞ்சிறு குழந்தை சீரழிக்கப்பட்டுள்ளது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பின் மீது மிகப்பெரிய அச்ச உணர்வினை அனைத்துத் தாய்மார்களின் உள்ளங்களிலும் - அனைவரது இல்லங்களிலும் ஏற்படுத்தியிருக்கிறது.

பெண் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களும் - குறிப்பாக, “போக்சோ” சட்டமும் - குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய சமூகமும் படுதோல்வி அடைந்து கூனிக்குறுகி நிற்பதை இக்கட்டுரையின் ஒவ்வொரு வரியும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

அந்தச் சிறுமி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக் குற்றத்தில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் - அவர்களில் ஒருவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். இன்னொருவர் காவல்துறை ஆய்வாளர் என்ற தகவல் ரத்தத்தை உறைய வைக்கிறது.

“வேலியே பயிரை மேய்வதுபோல் ஒரு காவல்துறை ஆய்வாளரே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது” அதிர்ச்சியளிப்பதோடு - இந்த மாநகரத்தில் மட்டுமின்றி- தமிழகத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு இனி யார்தான் பாதுகாப்பு? என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வர்மா அறிக்கையின் அடிப்படையிலான சட்டத் திருத்தங்களோ, டெல்லி நிர்பயா நிகழ்வினைத் தொடர்ந்து - தமிழகத்தில் பெண்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட 13 அம்சத் திட்டமோ - இந்தப் பெண் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.

நன்கு படிக்கும் அந்தச் சிறுமி - ஏழ்மை என்ற சேற்றின் கோரப் பிடியில் சிக்கி - பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு - வீட்டு வேலைக்குப் போன இடத்தில் நடைபெற்றுள்ள இந்த பயங்கரம்- “பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும்” மாணவ - மாணவிகளுக்கு நாம் கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும் தோற்றுவிட்டதைக் காட்டுகிறது.

நிராயுதபாணியாக சில கயவர்களிடம் மாட்டிக்கொண்ட இந்தச் சிறுமியின் உறவினர்களோ - காவல்துறையோ, ஏன் இந்தச் சமூகமோ பாதுகாப்பு அரணாக நிற்கவில்லை என்பது நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. சென்னையில் பெண் குழந்தைக்கு நேர்ந்துள்ள இந்த விபரீதம் புதிதல்ல. ஏற்கனவே 2018-ல் சென்னை அயனாவரத்தில் 11 வயது காது கேளாத சிறுமி 17 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு - அந்த வழக்கில் 15 பேருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகும் கூட சிறுமிகளின் பாதுகாப்பில் சென்னை மாநகரக் காவல்துறையும் பாடம் கற்பிக்கவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு நேரும் கொடுமைகளை, சமூகமும் தட்டிக் கேட்பதில்லை. பெற்றோரோ - பாதிக்கப்படும் குழந்தைகளோ புகார் அளிப்பதற்கும் தயக்கம் காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் போது உடனடியாகப் புகார் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இன்னும் முழு அளவில் ஏற்படுத்த முடியாதது மிகுந்த வருத்தத்திற்குரியது.

நாட்டின் வருங்காலமாகத் திகழும் - பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் - அவர்களின் எதிர்காலத்திற்கும் சிறு துரும்பளவு கூட ஆபத்து நேரக்கூடாது. பெண் குழந்தைகளின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பது இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்ல, வரப் போகின்ற தலைமுறைக்கும் முக்கிய நோக்கமாக இருப்பதுதானே நம் நாட்டிற்கும் - வீட்டிற்கும் பெருமை. ஆகவே, பெண் குழந்தைகளை நம் தலைமுறை பாதுகாக்கவில்லை என்ற ஒரு பழிச்சொல் - இந்தச் சமூகத்திற்கு வருவது ஏற்புடையதல்ல.

எனவே, பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் செலுத்த வேண்டும் என்று இரு கரம் கூப்பி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, அக்கம் பக்கத்தில் இருப்போர் இதில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் எனவும், “புகார் அளிப்பதற்குத் தயங்கும்” மனநிலையை மாற்ற காவல்துறையும் - குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையும் தீவிரமாக இணைந்து பணியாற்றி - மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

விரைவில் அமையும் திமுக ஆட்சியில் - பெண் குழந்தைகள் மட்டுமின்றி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மாவட்ட ரீதியாகத் தனி நீதிமன்றம் அமைத்து ஒரு நாள் கூட தாமதமின்றித் தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். தைரியமாகப் புகார் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் ரகசியப் பிரிவு ஒன்று மாநில அளவில் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்கின்ற அதே நேரத்தில் - இந்தச் சமூகமும் அதில் தனி ஆர்வம் செலுத்தி - எங்கு இதுபோன்ற தவறுகள் நடைபெற்றாலும் அதை உடனே காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்று கடும் நடவடிக்கை எடுத்திடவும் - பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும் முன்வர வேண்டும் என்றும் அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x