

காரைக்குடியில் தரமற்ற பாதாள சாக்கடைப் பணியால் சாலைகளில் திடீரென பள்ளங்கள் உருவாகி அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
காரைக்குடி நகராட்சியில் 2017-ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.112.5 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணி தொடங்கப்பட்டது. 526 தெருக்களில் கழிவுநீர்க் குழாய்கள் பதித்து, மேன்ஹோல்கள் கட்டுவது, தேவகோட்டை ரஸ்தா பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, வீடுகளுக்கு இணைப்புக் கொடுப்பது என மூன்று கட்டங்களாக பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த மார்ச் மாதத்திலேயே இப்பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால், 60 சதவீத பணிகள்கூட இதுவரை முடியவில்லை. கழிவுநீர் குழாய்களுக்காகத் தோண்டப் பட்ட பல சாலைகள் சீரமைக்கப்படவில்லை. மேலும் பல கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்ட சில சாலை களிலும் தரமற்ற பாதாள சாக்கடைப் பணியால் திடீரென பள்ளங்கள் உருவாகியுள்ளன.
முத்துராமலிங்கத் தேவர் நகரில் விநாயகர் கோயில் வீதியில் மூன்று மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட தார் சாலையில் நேற்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கிக் கொண்டது. இதனால் அவ்வழியே வேறு வாகனங்கள் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது.
சிலதினங்களுக்கு முன்பு பள்ளிவாசல் தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதித்திருந்த நிலையில் திடீரென பள்ளம் உருவானது. இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென பள்ளங்கள் உருவாகி, அதன் மூலம் விபத்துகள் நடக்கின்றன. தரமற்ற பாதாள சாக்கடைப் பணியால் ஏற்படும் திடீர் பள்ளங்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.
இது குறித்து காரைக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரகாஷ் கூறியதாவது: பாதாள சாக்கடைக் காகத் தோண்டப்பட்ட குழிகளில் குழாய்கள் பதித்த பிறகு கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். ஆனால், தரமான கான்கிரீட் தளம் அமைப்பதில்லை. அதை நகராட்சி அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை. இதனால் சாலைகளில் திடீரென பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. இதைத் தடுக்க அதிகாரிகள் கான்கிரீட் தளத்தை முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.