3 தலைமுறைகள் கண்ட திண்டுக்கல் திரையரங்கம்: "கிளைமாக்ஸ்"க்கு வந்த 71 ஆண்டுகால திரைப்பயணம்

திண்டுக்கல்லில் கடந்த 71 ஆண்டுகளாக இயங்கி வந்த என்.வி.ஜி.பி தியேட்டரின் முகப்பு தோற்றம்
திண்டுக்கல்லில் கடந்த 71 ஆண்டுகளாக இயங்கி வந்த என்.வி.ஜி.பி தியேட்டரின் முகப்பு தோற்றம்
Updated on
2 min read

திண்டுக்கல்லில் மூன்று தலை முறைகளை கடந்து 71 ஆண்டுகளாக திரை ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த என்.வி.ஜி.பி., திரையரங்கம் தனது திரைப்பயணத்தை நிறுத்திக் கொண்டது.

திண்டுக்கல் நகரில் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்.வி.பி.ஜி., திரையரங்கம். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுடன், 1160 இருக்கைகளை கொண்ட பெரிய திரையரங்கம் என்பதால் இங்கு படம் பார்ப்பதே ஒரு திருவிழா போல் இருக்கும். தியேட்டர் தொடங்கிய முதல்நாள் பொன்னப்ப பாகவதர் நடித்த ‘பவளக்கொடி’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் ரூ.20 பைசா முதல் அதிகபட்ச கட்டணமாக 1 ரூபாய் வரை தொடக்கத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலகட்டங்களில் இவர்களது படங்கள் அதிகம் திரை யிடப்பட்ட தியேட்டர் இதுதான். தற்போது வயது முதிர்ந்த நிலையில் உள்ள பல எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்கள் தங்களது நடிகர்கள் படம் வெளியானபோது தொடக்க காட்சியை கொண்டாடி மகிழ்ந்த தருணங்கள் அதிகம். திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் இருந்து பல திரைப்பட கலைஞர்கள் உருவாக இந்த திரையரங்கம் காரணமாக இருந்துள்ளது.

71 ஆண்டுகளாக மூன்று தலைமுறை களை கடந்து திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களை மகிழ்வித்த என்.வி.ஜி.பி., திரையரங்கில் இனி படம் பார்க்க முடியாது என்பது பழைய சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. 1990-களுக்கு முன்பு வரை புதிய படங்களை திரையிட்டு வந்த இந்த திரையரங்கம், அதன்பின்பு பழைய படங்களை தொடர்ந்து திரையிட்டு வந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பெரும் நட்சத்திரங்களின் எவர்க்ரீன் படங்களை அடிக்கடி திரையிட்டதால் கணிசமான ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து சென்றனர். இதனால் போதிய வருமானம் கிடைத்து வந்தது.

இடிக்கப்பட்டு வரும் 3 தலைமுறை கண்ட என்.வி.ஜி.பி தியேட்டர்
இடிக்கப்பட்டு வரும் 3 தலைமுறை கண்ட என்.வி.ஜி.பி தியேட்டர்

இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த எட்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வருமானம் முற்றிலும் இல்லை. இதனால் மாற்று வழியை யோசிக்க தொடங்கிய திரையரங்கு உரிமையாளர்கள் இத்தியேட்டரை இடிக்க திட்டமிட்டனர்.

தியேட்டர் உரிமையாளர் பி.ஆர்.மனோகர் கூறியதாவது: எனது தாத்தா 71 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தியேட்டர் இது. மூன்று தலைமுறைகளாக பொன்னப்ப பாகவதர், தியாகராஜ பாகவதர் காலம் முதல் தற்போது விஜய், அஜித் காலம் வரை திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்துள்ளது. இனி தியேட்டர்கள் என்பது 100 இருக்கைகளுக்குள் இருந்தால்தான் நிரம்பும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற பழைய பெரிய தியேட்டர்களை நடத்துவது சிரமம். இதுதவிர ஆன்லைனில் புதிய படங்கள் வெளியாவதும் ஒரு காரணம். இனி படிப்படியாக தியேட்டர்கள் எண்ணிக்கை குறையத்தான் வாய்ப்புள்ளது. இதனால் படங்கள் திரையிடுவதை நிறுத்திவிட்டு இடிக்கத் தொடங்கிவிட்டோம். அடுத்து என்னவாக மாற்றுவது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை, என்றார்.

கடந்த 71 ஆண்டுகளாக பழைய சினிமா தியேட்டர்களுக்கே உரிய தனித்துவமான முகப்புடன் கம்பீரமாக காட்சியளித்த என்.வி.ஜி.பி., தியேட்டரை இடிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. தற்போது திரையரங்கைச் சுற்றிலும் சுண்ணாம்பு காரைகளால் கட்டப்பட்ட செங்கள் கற்கள் சிதறிக் கிடக்கின்றன. தியேட்டர் இடிக்கப்படுவதை கேள்விப்பட்ட உள்ளூர் பெரியவர்கள் பலர் இங்கு வந்து தங்கள் நினைவுகளை அசைபோட்டுச் செல்கின்றனர்.

தியேட்டரை பார்க்க வந்த மிஷ்கின்

சிறுமலை மலைப்பகுதியில் தனது படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்க வந்த திரைப்பட இயக்குனர் மிஷ்கின், தனது சிறுவயது காலத்தில் தந்தையுடன் சினிமா பார்த்த திண்டுக்கல் என்.வி.ஜி.பி., தியேட்டர் நினைவுக்கு வர உடனடியாக புறப்பட்டு தியேட்டரை காணச் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளதாவது “என் திரையுலக வாழ்க்கையின் முதல்படியே இந்த தியேட்டர்தான். என் தந்தையின் கையை பிடித்துக் கொண்டு சிறுவயதில் இந்த தியேட்டருக்குள் நுழைந்தேன். கடைசியாக சென்னை வந்து நகரவாசியாகி விட்டேன். ‘என் வாழ்க்கையை ஓடவைத்த தியேட்டர்’ இது. 5 வயது சிறுவனாக நான் பார்த்த தூண்கள் உள்ளிட்டவை அப்படியே இருந்தது.

தியேட்டரை இடிக்கப் போகிறோம் என்று அவர்கள் சொன்னவுடன் என் நெஞ்சில் வலி ஏற்பட்டது. தியேட்டரை விட்டு வெளியே வந்து வாசலில் நின்று அண்ணாந்து பார்த்தேன். ஐந்து வயது சிறுவனாக நான் என் தந்தையின் கையைபிடித்துக் கொண்டு நின்ற நினைவு என்னுள் வந்து சென்றது” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in