Published : 27 Dec 2020 12:17 PM
Last Updated : 27 Dec 2020 12:17 PM

தேனியில் அதிகரித்துள்ள தெருக்கடைகள்: பொலிவிழந்து வரும் வாரச்சந்தைகள்

குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்துள்ள கடைகள், வீடு தேடி வரும் பொருட்கள், தெருக்களுக்கு தினமும் வரும் காய்கறி தள்ளுவண்டிகள், மால் மற்றும் ஆன்லைன் விற்பனை போன்றவற்றினால் தேனி மாவட்டத்தில் உள்ள வாரச்சந்தைகள் பொலிவிழந்து வருகின்றன. சந்தைகளில் தற்போது கடைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து பெயரளவிற்கே செயல்பட்டு வருகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பொருட்களைத் தேடிச் சென்று வாங்கும் நிலை இருந்தது. இதனால் பல பகுதிகளிலும் சந்தைகள் உருவாகின. காய்கறி, பலசரக்கு, அரிவாள், கத்தி, விவசாய கருவிகள் என்று அனைத்தும் ஒரு இடத்திற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. பின்பு வெவ்வேறு பொருட்களுக்கும் தனித்தனி சந்தைகள் உருவாகின. இருப்பினும் காய்கறி, பலசரக்கு வாரச்சந்தைகள் முக்கியத்துவம் பெற்றதாகவே இருந்து வருகிறது.

தேனி மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நாட்களில் இச்சந்தைகள் கூடுவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை-சிலமலை, போடி. திங்கட்கிழமை-தேவாரம், ஆண்டிபட்டி. செவ்வாய்-பெரியகுளம், கம்பம். புதன்-பாளையம், தேவதானப்பட்டி. வியாழன்-சின்னமனூர். வெள்ளிக்கிழமை-கோம்பை. சனிக்கிழமை-தேனி என்று வாரச் சந்தைகள் செயல்படுகின்றன. இதுதவிர பல்வேறு உட்கடை கிராமங்களிலும் வாரச்சந்தைகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன.

வீட்டு சமையலுக்குத் தேவையான பொருட்களை சந்தையில்தான் வாங்க முடியும் என்ற நிலை முன்பு இருந்தது. எனவே குடியிருப்புகளில் இருந்து கூட்டம், கூட்டமாக பெண்கள் சந்தைகளுக்கு வந்தனர். இதனால் தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள், துணிகள், அலங்காரப் பொருள் விற்பனை என்று சந்தைகள் அடுத்தடுத்த நிலைக்குச் சென்றன.
ஆனால் நகர விரிவாக்கம், தெருக்களில் கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, தள்ளுவண்டி, இலகுரக வாகனங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கே கொண்டு வந்து விற்பனை செய்யும் நிலை போன்றவற்றினால் சந்தைகளின் மதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. அனைத்து நாட்களிலும் எல்லா பொருளும் குடியிருப்புகளுக்கு அருகிலேயே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சந்தை விற்பனை சரிவை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. ஆடை, பேன்ஸி பொருள், தின்பண்டம், இரும்புப் பொருள், உரம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் வாரச்சந்தையில் இருந்து விலகின. தற்போது வாரச்சந்தை என்றாலே காய்கறி, பலசரக்கு விற்பனை மட்டும்தான் என்றளவில் சென்று கொண்டிருக்கிறது. கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் சந்தைக்கு செல்வார்கள் என்ற மேல்தட்டு மனோநிலையும் விற்பனையை வெகுவாய் பதம்பார்த்தது. தற்போதைய ஆண்ட்ராய்ட் காலத்தில் மால், பிரமாண்டமான காம்ப்ளக்ஸ், விரல் நுனியில் பொருட்களை வீட்டிற்கே வரவழைப்பது போன்ற மாற்றங்கள் வாரச்சந்தையை மேலும் பொலிவிழக்கச் செய்து வருகிறது.

ஏற்கனவே இந்த வியாபாரத்தில் ஈடுபட்டவர்களே ‘வேறுவழியின்றி’ இதனைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து தேவாரத்தைச் சேர்ந்த பூண்டு வியாபாரி ஆரோக்கியம்மாள் கூறுகையில், முன்பு அனைத்து வாரச்சந்தைகளுக்கும் செல்வேன். தற்போது விற்பனை குறைந்து விட்டது. எனவே சிலமலை, போடி, தேவாரம் என்று அருகில் உள்ள சந்தைகளுக்கு மட்டும் செல்கிறேன். எங்கள் குடும்பத்தில் எனக்குப் பிறகு யாரும் வாரச்சந்தை வியாபாரத்தில் ஈடுபடவில்லை என்றார்.

காலணி வியாபாரி பீர்ஒலி கூறுகையில், மதுரையில் சென்று மொத்தமாக கொள்முதல் செய்து வருவோம். விற்பனை குறைவு, வாரச்சந்தை களின் தரைவாடகை அதிகரிப்பு, நாகரீக மாற்றம் போன்றவற்றினால் வாரச்சந்தைக்கு பலரும் வருவதில்லை. உள்ளூர் வியாபாரிகளை யும், வியாபாரத் தையும் மேம்படுத்தும் வகையில் சந்தை கொள் முதலை பொதுமக்கள் அதிகரிக்க வேண்டும் என்றார்.

வாரச்சந்தைகள் என்பது பொருள் கொள்முதல் மட்டுமல்ல. அருகில் உள்ள இல்லத்துப் பெண்கள் ஒன்றாக சேர்ந்து கலகலப்பு மனோநிலையில் செல்லும் தன்மையை கொண்டிருக்கும். ஒருவருக்கு ஒருவர் பல்வேறு பிரச்னைகளையும், ஆதங்கங்களையும் பகிர்ந்து கொண்டதால் அண்டை வீட்டு உறவுகளும் மேம்பட்டது.
உறவினர்கள் இல்லாத நேரத்தில் இதுபோன்ற ஆறுதல்களும், வழி காட்டல்களும் வழித்துணையாக பயணித்தன.

எனவே தன்னார்வலர்களும், சமூக அமைப்புகளும் இதுபோன்ற வாரச்சந்தை பயன்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உள்ளூர் மேம்பாட்டு ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x