

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாகப் பதவி வகித்தவருமான டி.யசோதா உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலையில் காலமானார்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 1980, 1984, 2001 மற்றும் 2006-ம் ஆண்டுகள் என 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு பெற்றவர் டி.யசோதா. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராகவும், அறக்கட்டளைக் குழு தலைவராகவும் இருந்தவர் டி.யசோதா.
சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் காலமானார்.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தி வருமாறு:
“தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான டி. யசோதா மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இளமைப் பருவம் முதல் பெருந்தலைவர் காமராஜர் தலைமையின் ஈர்ப்பால் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து தமது இறுதி மூச்சு வரை கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் பங்கெடுத்துக் கொண்டபோதுதான் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவராக, ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு பெற்றவர். சட்டப்பேரவையில் ஏழை, எளிய மக்களின் உரிமைக் குரலாக ஒலித்தவர். மேடைப்பேச்சில் அனைவரும் கவருகிற வகையில் சிறப்பாக உரையாற்றக் கூடியவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ள டி.யசோதா மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு அவர் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.