

சிவகங்கை முன்னாள் எம்பியும், அதிமுக மாவட்டச் செயலாளருமான செந்தில்நாதன் சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடியில் களமிறங்க முயற்சித்து வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டையாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலையின் பேச்சு அமைந்துள்ளதால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் 2016 தேர்தலில் அதிமுக போட்டியிட்டு சிவகங்கை, மானாமதுரையில் வென்றது திருப்பத்தூரில் திமுகவும், காரைக்குடியில் திமுக கூட்டணியான காங்கிரஸும் வெற்றி பெற்றன.
வருகிற தேர்தலிலும் காரைக்குடியில் அதிமுகவினர் போட்டியிட விரும்புகின்றனர். முன்னாள் எம்பியும், மாவட்டச் செயலாளருமான செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் கற்பகம் இளங்கோ, சோழன் சித.பழனிசாமி ஆகியோர் ‘சீட்’ வாங்க தலைமையிடம் காய் நகர்த்தி வருகின்றனர்.
இதில் செந்தில்நாதன் சொந்த செலவில் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறார். கரோனா ஊரடங்கு காலத்தில் காரைக்குடி தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக காய்கறிகளை வழங்கினார். இதனால் தனக்கு காரைக்குடி தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் செந்தில்நாதனுக்கு பாஜக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
இரு நாட்களுக்கு முன்பு காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, வருகிற தேர்தலில் ஹெச். ராஜாவை எம்எல்ஏவாக்கி, அமைச்சராக்குவோம் என்று கூறியுள்ளார். இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணாமலை பேச்சு மூலம் ஹெச்.ராஜா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மேலும் ஹெச்.ராஜா ஏற்கெனவே 2001 தேர்தலில் காரைக்குடியில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் தனக்குச் சாதகமான காரைக்குடியைத்தான் மீண்டும் கேட்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அதிமுக வெற்றி பெறுவதற்கு சாதகமான தொகுதிகளைத் தான் பாஜகவும் குறி வைத்துள்ளது. நாங்கள் ஏற்கெனவே காரைக்குடியில் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம் என்றனர். நடிகர் ரஜினி கட்சி தொடங்கிய பிறகு அவருடன் பாஜக கூட்டணி வைக்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு காட்சி மாறினால், காரைக்குடி தொகுதியில் அதிமுகவை எதிர்த்து பாஜகவே களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.