

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (டிச.27) அதிகாலை நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வந்திருந்த குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருநள்ளாற்றில் சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் அமைந்துள்ள பிரணாம்பிகை உடனுறை தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா சிறப்பான வகையில் நடைபெற்றது. இக்கோயிலில் அனுக்கிரகமூர்த்தியாக சனி பகவான் அருள் பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கடந்த சனிப்பெயர்ச்சி விழா 2017-ம் ஆண்டு டிச.19 ம் தேதி நடைபெற்றது.
இம்முறை சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். சனீஸ்வர பகவானுக்குப் பல்வேறு கோயில்களில் தனி சன்னதி இருந்தாலும் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் சனீஸ்வரனை வழிபடுவது மிகவும் சிறப்பானது என பக்தர்களால் கருதப்படுகிறது.
இவ்விழாவையொட்டி சனீஸ்வர பகவானுக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் வைர அங்கியில் சனீஸ்வர பகவான் காட்சியளித்தார். சனிப்பெயர்ச்சி நிகழ்வைக் குறிக்கும் வகையில் அதிகாலை சரியாக 5.22 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைக் கோயிலுக்கு வெளியில் உள்ள பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் அதிர் வேட்டுகள் முழங்கின. அப்போது கோயிலின் உள்ளேயும், வெளியேயும் இருந்த பக்தர்கள் கைகளைக் கூப்பி சனி பகவானை தரிசத்தனர்.
கோயிலினுள் வடக்குப் பிரகார மண்டபத்தில் உற்சவரான சனீஸ்வர பகவான் நேற்று மாலை முதல் தங்கக் காக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, அமைச்சர்கள் ஆர்.கமலக்கண்ணன், எம்.கந்தசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான அர்ஜூன் சர்மா, சார் ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) நிர்வாக அதிகாரியுமான எம்.ஆதர்ஷ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கோயிலுக்குள் தரிசிக்க வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் அறிவித்திருந்தன. திருநள்ளாற்றைச் சேர்ந்த எஸ்.பி.எஸ்.நாதன் என்பவர் பக்தர்களை அனுமதிக்கத் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் உட்பட வழக்கில் தொடர்புடைய 5 பேர் பங்கேற்ற கூட்டத்தில் கோயிலுக்குள் வரக்கூடிய யார் ஒருவருக்கும் கரோனா நெகட்டிவ் சான்று அவசியம் என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய நிலையில், இதனை எதிர்த்து திருநள்ளாற்றைச் சேர்ந்த சிங்காரவேலு என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யும்போது, வெப்பநிலை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு மட்டும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறிகள் இல்லாத பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என நேற்று மாலை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கரோனா சான்று இல்லாமல் நேற்று திருநள்ளாறு வந்து கோயிலுக்குள் செல்ல முடியாமல் ஏராளமான பக்தர்கள் அல்லல்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு நிம்மதி அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கரோனா பரவல் சூழல் என்பதாலும், பகதர்களை அனுமதிக்கும் முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் வழக்கத்தை விட பக்தர்கள் வருகை மிகக் குறைவாகவே உள்ளது.
பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடி நீர், கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் சுமார் 1000க்கும் மேலான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க வேண்டும் என்பதற்காக நளசக்கரவர்த்திக்கு இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி பின்னர் தர்பாரண்யேஸ்வரரையும், சனீஸ்வர பகவானையும் வழிபட்டதால் அவருக்கு ஏற்பட்ட துன்பம் விலகி, அவர் இழந்ததையெல்லாம் மீண்டும் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதுபோல இங்கு வந்து நள தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசிப்போருக்கும் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இம்முறை கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நள தீர்த்தம் உள்ளிட்ட அனைத்து தீர்த்தங்களிலும் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.