

‘2020-ல் தேனாறும் பாலாறும் ஓடும்’ என கணித்த ஜோதிடர்களின் கணிப்பையெல்லாம் தவிடு பொடியாக்கி, உயிரிழப்பு அச்சத்தை ஏற்படுத்தி, உலக நாடுகளை பொருளாதார நெருக்கடிக்கு தள்ளியது கரோனா. வருமானம், வேலைவாய்ப்பு, கல்வி என அனைத்தும் முடங்கிய நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறுவோம்.
* உள்ளாட்சித் தேர்தலால் பரபரப்புக்கு பஞ்சமின்றி ஜனவரி முதல் வாரம் கடந்து சென்றது. அதிமுக 10 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றியது.
* ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்காக கடந்த பிப்ரவரி 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நெய்வேலி சுரங்கத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் இறங்க, ஆதரவாக அவரது ரசிகர்கள் சுரங்கம் முன்பு திரண்டனர்.
* கரோனா பற்றி அறிந்திருந்தாலும், அதுகுறித்த மருத்துவப் புரிதல் இல்லாத நிலையிலும், பிப்ரவரி 6-ம் தேதியே கடலூர் அரசு மருத்துவனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டன. மார்ச் மாதம் 22-ல் ஒரு நாள் பொதுமுடக்கமும், 26 முதல் தொடர் பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டது.
* கடலூர் மாவட்டத்தில் கரோனா தாக்குதலுக் குள்ளாகி உயிரிழந்தவர்கள் 281.
* பொதுமுடக்கக் காலத்தில் களப் பணியில் இருந்த விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு உயிரிழந்தார். முன்னாள் விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் குழந்தைத் தமிழரசன் சிறுநீரக பாதிப்பினால் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டாலும், அவரும் நோய் தாக்குதலால் தான் உயிரிழந்தார் என நம்பப்படுகிறது. காவல் துறையில் இரு காவலர்கள் உயிரிழந்தனர்.
* கரோனா ஒருபுறம் இருக்க, கடலூர் மாவட்டத்தை புயலும் கலங்கடித்தது. குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், கடலூர், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, குமராட்சி பகுதிகள் வழக்கம்போல வெள்ள நீரில் மூழ்கி மக்களின் இயல்பு வாழக்கையை முடக்கியது. சிதம்பரத்தில் நடராஜர் கோயில் உள்ளே இடுப்பளவு மழை நீர் தேங்கி நின்றது.
* நமது மாவட்டத்தின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான என்எல்சி இந்தியா அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தினால் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
* பண்ருட்டி நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி,பொதுமுடக்கக் காலத்தில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தியதால் முதல்வரின் பாராட்டைப் பெற்று, ஆட்சியரால் கவுரவிக்கப்பட்டார்.
* கடலூர் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றிய அன்புச்செல்வன், கடந்த ஜூலை மாதத்துடன் ஓய்வுபெற்ற நிலையில், சந்திரசேகர் சகாமூரி ஆகஸ்டு மாதம் முதல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று இயற்கை சீற்றத்தில் ஆற்றிய சீரிய பணி மக்களின் பாராட்டைப் பெற்றது.
* 2020ல் பல இன்னல்களை சந்தித்திருக்கிறோம். எதிர்வரும் 2021-ம் ஆண்டு புதிய உத்வேகத்துடனும், புதிய சாதனைகளுக்கு நிகழ்விடமாக அமைய வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பு.
பண்ருட்டிக்கு பெருமை
இந்த நெருடல்களுக்கு மத்தியில் பண்ருட்டியைச் சேர்ந்த ஐஸ்வர்யா, பிரியங்கா மற்றும் கிருஷ்ணப்ரியா ஆகிய 3 மாணவிகள் முதன்மை போட்டித் தேர்வுகளில் பங்கேற்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளுக்கு தகுதி பெற்று, பயிற்சிக் களம் கண்ட சம்பவமும் 2020 ஆகஸ்டு மாதத்தில் அரங்கேறியது ஆறதலை தருகிறது.