

உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அரசு வாகனங்களில் பொருத்தப்பட்ட கூடுதல் பம்பர்கள் உள்ளிட்ட இணைப்புகளை உடனடியாக அகற்றும்படி முதல்வர் அலுவலகம் உட்பட அனைத்து துறைகளின் செயலர்களுக்கும் தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
நான்கு சக்கர வாகனங்களில், கூடுதலாக ‘கிராஷ் கார்டு’ எனப்படும் பம்பர்கள் அதிகஅளவில் பொருத்தப்படுகின்றன. இவ்வாறு பொருத்தப்படும் கூடுதல் இணைப்புகளால் விபத்துகளின் போது, பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள ‘ஏர் பேக்’ உள்ளிட்டவை சரியாக செயல்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த கூடுதல் இணைப்புகளே பல விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. இவற்றைகருத்தில் கொண்டு கூடுதல்இணைப்புகளை பொருத்தக்கூடாது என்று 2017-ம் ஆண்டே மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வாகன விபத்துதொடர்பான நீதிமன்ற உத்தரவையடுத்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இதுபோன்ற கூடுதல் பம்பர்களை பொருத்தியுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் அலுவலகம், அமைச்சர்களின் சிறப்புஉதவியாளர்கள், துறை செயலர்கள், அனைத்து துறை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு விருந்தினர் மாளிகை அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு தமிழக தலைமை செயலர் கே.சண்முகம் அனுப்பியுள்ள அறிவுறுத்தல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில் விவிஐபிக்கள், விஐபிக்கள் மற்றும் இதர அதிகாரிகள் உள்ளிட்டோரின் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கிராஷ் பார்கள் மற்றும் புல் பார்கள் எனப்படும் பம்பர்களை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த 2017-ம்ஆண்டு இது தொடர்பாக மத்தியசாலை போக்குவரத்து அமைச்சகமும் உத்தரவு வெளியிட்டுள்ளது. அதில் மோட்டார் வாகன சட்டப்படி இதுபோன்ற இணைப்புகள் பொருத்துவது அபராதத்துக்குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிராஷ் கார்டுகள் மற்றும் புல் கார்டுகள் மற்றும் மோட்டார் வாகன சட்டப்படி விதிமீறலாக கருதப்படும் எந்த ஒரு கூடுதல் இணைப்புகளையும் அரசு வாகனங்களில் பொருத்தக்கூடாது. பொருத்தப்பட்டிருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டப்படி இதுபோன்ற இணைப்புகள் பொருத்துவது அபராதத்துக்குரிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.