

முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் ஆர்.ஜனார்த்தனன் நேற்று காலமானார்.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கடம்பூரைச் சேர்ந்தவர் கடம்பூர் ஆர்.ஜனார்த்தனன் (91). அதிமுகவின் மூத்த தலைவரான இவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
1984, 89, 91-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 3 முறை திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 1998-ல் இதே தொகுதியில் எம்.பி.யாக வெற்றிபெற்ற இவர், பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பதவிவகித்தார்.
இவரது மனைவி ரத்தினத்தாய் கடந்த 2007-ம் ஆண்டு காலமானார். வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவனையில் கடம்பூர் ஆர்.ஜனார்த்தனன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று (27-ம் தேதி) கடம்பூரில் நடைபெறுகிறது. கடம்பூர் ஜனார்த்தனன் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.