

பாஜக மகளிரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. எனவேதான், முதல்வர் வேட்பாளரை பாஜகவின் தேசிய தலைமை அறிவிக்கும் என பாஜக நிர்வாகிகள் கூற வேண்டியுள்ளது. கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி, முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்க வேண்டும். முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இங்கு பெரிய பிரச்சினையாக கருதவில்லை.
அனைத்து கட்சிக்கும் ஆட்சி, அதிகாரம் என்பது லட்சியம். எனவேதான் வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று பேரவையில் இடம்பெற தமிழக பாஜக விரும்புகிறது. தேர்தலில் வெற்றிபெறும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமைச்சர் பதவி குறித்து முடிவு செய்யப்படும்.
அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. எந்த கூட்டணியும் நிரந்தரம் என்று யாராலும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.