

மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கு மேலும் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: "காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம்
28.6.2014 அன்று மாலை இடிந்து விழுந்து இடிபாடுகளில் கட்டடத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட 22 நபர்களுக்கு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்தத் துயரச் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்து விட்டனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எவ்வித பாரபட்சமுமின்றி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கவும் அரசு ஆணையிட்டது.
இது மட்டுமல்லாமல், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரின் மருத்துவச் செலவினையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் உடல்களை தமிழக அரசின் செலவில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லவும் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்த இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த இந்த தொழிலாளர்களின்
குடும்பங்களுக்கு ஏற்கெனவே அறிவித்த 2 லட்சம் ரூபாய் அல்லாமல், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மேலும், கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.