

செங்கல்பட்டு அடுத்த பாலூரில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 585 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பாலூர் ஏரி. இந்த ஏரி நீரால் பாலூர், கொங்கனாஞ்சேரி, கொளத்தாஞ்சேரி, கடும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 2,550 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் ‘நிவர்' புயல் காரணமாக பழைய சீவரம் ஏரியில் இருந்து உபரிநீர் பாலூர் ஏரிக்கு வந்ததால், இந்த ஏரி 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது இந்த ஏரியில் 165 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இப்பகுதி மக்களும் விவசாயிகளும் பாலூர் ஏரி நீரின் மூலம் 3 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான அளவு பயன்பெறுவர் என பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சட்ட விரோத மணல் கடத்தலாலும், நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்ந்து போனதாலும் மழைக் காலங்களில் பாலூர் ஏரி முழுமையாக நிரம்பாமல் இருந்து வந்தது. மேலும், இந்த ஏரிக்கு பழைய சீவரம் ஏரி உபரிநீரை, அப்பகுதி மக்கள் திறந்துவிட மறுத்து வந்தனர். இந்த முறை பொதுப்பணித் துறையினரின் விடாமுயற்சியால், உபரிநீர் திறந்துவிடப்பட்டதால், பாலூர் ஏரி இப்போது நிரம்பியுள்ளது.
இதுகுறித்து விவசாயி தனசேகர் கூறியதாவது: ஏரியைச் சுற்றியுள்ள செங்கல் சூளைகளால் பாலூர் ஏரி பாதிக்கப்பட்டது. 2001-ல் மழைக்காலத்தில் ஏரிக்கரைகள் உடைந்து நீர் முழுவதும் வெளியேறியது. அதைத் தொடர்ந்து விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று ஏரியின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. இதனால், தற்போது பாலூர் ஏரி நிரம்பியுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறைஉதவிப் பொறியாளர் பிரனேஷ் பிரபு கூறியதாவது: உலக வங்கியின் நிதி உதவியோடு நீர்வள நிலவளத் திட்டத்தின்கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் இந்த ஏரி சீரமைக்கப்பட்டது. பாலாற்றில் இருந்து பாலூர் ஏரிக்கு நீர் வரும் வரத்துக் கால்வாய்களும் சீரமைக்கப்பட்டன. 5.8 கி.மீ நீளமும் 91 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியை ஆழப்படுத்தியதால், தற்போது 165 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது, எனவே, 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாலூர் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்றார்.