Last Updated : 26 Dec, 2020 09:17 PM

 

Published : 26 Dec 2020 09:17 PM
Last Updated : 26 Dec 2020 09:17 PM

கரோனா அச்சம்: ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்களை மட்டும் அனுமதிக்க முடிவு- பட்டியல் தயாரிப்புப் பணி தீவிரம்

கரோனா பரவல் அச்சம் காரணமாக, ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்களை மட்டும் அனுமதிக்கத் தேர்தல் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தேர்தல் ஆணையத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னரே உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பழுது நீக்கி, தயார்படுத்தி வைப்பதோடு, கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை, வெளி மாநிலங்களில் இருந்து வரவழைத்துத் தயார் நிலையில் வைக்கும் பணி, அந்தந்த மாவட்டத் தேர்தல் பிரிவு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பத்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மாவட்ட நிர்வாகத்தினர், கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 68 ஆயிரத்து 222 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 02 ஆயிரத்து 142 பெண் வாக்காளர்கள், 369 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்காளர்கள் உள்ளனர்.

தவிர, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைச் சேர்க்க, உயிரிழந்தவர்களின் பெயர்களை நீக்க, ஒரு தொகுதிக்குள்ளும், ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கும் முகவரி மாற்றச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 1.70 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். கரோனா வைரஸ் பரவல் நடப்பாண்டு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிதல், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கை கழுவுதல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவை அரசு சார்பில் பின்பற்றப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த, இந்தத் தடுப்பு நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களுக்குக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வரும் சட்டப்பேரவைத் தேர்தல், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நடத்தப்பட உள்ளது. இதற்கேற்ப வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது.

ஒரு மையத்துக்கு ஆயிரம் பேர்

இது தொடர்பாக மாவட்டத் தேர்தல் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, ''மாவட்டம் முழுவதும், 3,048 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி மையத் தலைமை அலுவலர், 3 உதவி தலைமை அலுவலர்கள், 2 உதவியாளர்கள், ஒரு வாக்குச்சாவடி மைய அதிகாரி ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பர். தவிர, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் இருப்பர். ஒரு வாக்குச்சாவடியில் முன்பு, 1,500 வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

தற்போது கரோனா அச்சம் காரணமாக, ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மீதமுள்ளவர்கள் அதே வாக்குச் சாவடி வளாகத்தில் உள்ள வேறு வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடி வளாகத்திலும் 3 முதல் 4 வாக்குச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் என்ற அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மாவட்டத்தில் கூடுதலாக 400 முதல் 500 வாக்குச்சாவடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளன'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x