மெட்ரோ ரயில்; வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் சோதனை ஓட்டம் முடிந்தது: விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு வருகிறது

மெட்ரோ ரயில்; வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் சோதனை ஓட்டம் முடிந்தது: விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு வருகிறது
Updated on
2 min read

மெட்ரோ ரயில் வழித்தடத்தில் புதிய மைல்கல்லாக திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான பணி முடிந்து, டீசல் இன்ஜின் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்தகட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் முடிந்தபின், பயணிகள் பயன்பாட்டுக்கு ஜனவரி இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் தற்போது 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம், பாரிமுனை வழியாக வண்ணாரப்பேட்டை வரையிலும், அதேபோன்று வண்ணாரப்பேட்டையிலிருந்து பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 9.05 கி.மீ. தூரம் உள்ள இந்த வழித்தடத்தில் 8 மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஷ்ரம், திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியில் ரயில் நிலையங்கள் (வண்ணாரப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே 8 மெட்ரோ நிலையங்களுடன் 2 நிலத்தடி மற்றும் 6 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் மற்றும் திருவொற்றியூர் / விம்கோ நகர் மெட்ரோ நிலையம் இடையே சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று நடத்தியது. சோதனை ஓட்டத்தின்போது, டீசல் லோகோமோடிவ் வாகனம் அதன் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. சோதனையின்போது மொத்தம் 9.05 கி.மீ. அப்லைன் மற்றும் டவுன்லைன் இரண்டிலும் இயக்கவும் வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரையிலான முழு கட்ட முதல் விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டன.

புதிய பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. சிக்னல் மற்றும் மின்மயமாக்கல் பணி முடிந்து இப்பாதையில் டீசல் இன்ஜின் சோதனை நடத்தப்பட்டது இது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜனவரி இரண்டாவது வாரம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் முன்னிலையில் அதிவேகமாக மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடத்த உள்ளனர்.

இதன்பின் பயணிகள் ரயில் இயக்க அனுமதி கிடைத்ததும் ஜனவரி இறுதிக்குள் வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதன் மூலம் திருவொற்றியூர் விம்கோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வரையிலும் தடையின்றி விரைவாகச் செல்ல முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in