

சுற்றுலாப் பயணிகளுக்காக நாளை முதல் (டிச.27) கோவை குற்றாலம் திறக்கப்படுவதாக மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாகக் கோவையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால், போதிய நீர்வரத்து இருந்தும் கோவை குற்றாலத்துக்குச் செல்லச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு நாளை கோவை குற்றாலம் திறக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் கூறும்போது, ''கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் நுழைவுக் கட்டணம் செலுத்தும் முன்பு வெப்ப நிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் டிக்கெட் கவுன்ட்டரில் விற்கப்படும் முகக்கவசத்தை வாங்கி அணிந்துகொண்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
சாடிவயலில் இருந்து கோவை குற்றாலம் செல்லும் வாகனத்தில் ஏறும் முன்பு, அங்கேயும் ஒவ்வொரு பயணிக்கும் வெப்ப நிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். பின்பு சானிடைசரைக் கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொண்டு வாகனத்தில் ஏற வேண்டும். இந்த விதிகளைக் கடைப்பிடித்து சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.