

சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு பாசனநீர் முறையாக திறக்காததைக் கண்டித்து 2021 ஜன.7-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் 129 கண்மாய்களில் 70 கண்மாய்களை நிரப்பிவிட்டதாக ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி விளக்கமளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48 வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 129 கண்மாய்களுக்குட்பட்ட 6,038 ஏக்கர் நிலங்கள் ஒருபோக பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் செப்.27-ம் தேதி ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை.
இதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து அக்.1-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதுவும் முறையாக திறக்கவில்லை. இதேபோல் விவசாயிகள் போராட்டம் அறிவித்ததும், தண்ணீர் திறப்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழக்கமாக வைத்திருந்தனர்.
தற்போது பெரியாறு, வைகை அணையில் தண்ணீர் இருப்பு குறைந்ததை அடுத்து நவ.17 முதல், முறை பாசனம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி வைகை அணையில் இருந்து 5 நாட்களுக்கு தண்ணீர் திறப்பதும், 5 நாட்களுக்கு அடைப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த முறைபாசனத்திலும் சிவகங்கை மாவட்டத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. இதனால் பெரும்பாலான பெரியாறு பாசன கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன.
மேலும் அப்பகுதியில் இந்தாண்டு எதிர்பார்த்த மழையும் பெய்யவில்லை. இதனால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதையடுத்து கடந்த வாரம் விவசாயிகள் சிவகங்கை ஆட்சியரை சந்திக்க சென்றபோது, அவர் சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஜன.7-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பெரியாறு பாசன விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கிராமங்கள்தோறும் கூட்டம் நடத்தி விவசாயிகளை திரட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்திற்கு 63.52 கன அடி பெரியாறு நீர் திறக்கப்பட வேண்டும். இதுவரை மொத்தம் 129 கண்மாய்களில் 76 கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதில் லெசிஸ் கால்வாய் மூலம் 24 கண்மாய்களுக்கும், கட்டாணிப்பட்டி 1 மற்றும் 2-வது கால்வாய் மூலம் 30-ம், 48-வது மடை கால்வாய் மூலம் 11-ம், ஷீல்டு கால்வாய் மூலம் 11 கண்மாய்களும் பயன்பெற்றுள்ளன.
டிச.26-ம் தேதி முதல் ஷீல்டு மற்றும் லெசிஸ் கால்வாய்களுக்கு தலா 40 கன அடியும், கட்டாணிப்பட்டி 2-வது மடை கால்வாய்க்கு 5 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.
இதுகுறித்து ஐந்து மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘ ஷீல்டு கால்வாய் மூலம் பயன்பெறும் முதல் கண்மாயான கள்ளராதினிப்பட்டி கண்மாயே வறண்டு கிடக்கிறது.
அதன்மூலம் அதிகாரிகள் கூறுவது உண்மையில்லை என தெரியவரும். தண்ணீர் திறந்தாலும் குறிப்பிட்ட கன அடி திறப்பதிலலை. பெரியரளவிற்கு தண்ணீர் திறந்துவிட்டு உரிய கன அடி திறந்துவிட்டதாக கூறுகின்றனர். அதை சிவகங்கை மாவட்ட நிர்வாகமும் கண்காணிப்பதில்லை,’ என்று கூறினர்.