Last Updated : 26 Dec, 2020 07:12 PM

 

Published : 26 Dec 2020 07:12 PM
Last Updated : 26 Dec 2020 07:12 PM

கோவையில் 4 சக்கர வாகனங்களின் பம்பர்கள் அகற்றம்: 10 நாட்களில் ரூ.3.27 லட்சம் அபராதம் விதிப்பு

கோவையில் 4 சக்கர வாகனங்களின் பம்பர்களை அகற்றிவரும் போக்குவரத்துத் துறையினர், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் முக்கியக் காரணமாக உள்ளன. எனவே, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர்களைப் பொருத்தக் கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2017-ல் உத்தரவிட்டது. ஆனால், கார்களை வாங்கும் பெரும்பாலானோர், விபத்தில் சிக்கும்போது காருக்குச் சேதாரம் ஏற்படுவதைத் தவிர்க்க ‘கிராஷ் கார்டு' எனப்படும் பம்பரைப் பொருத்துகின்றனர்.

அவ்வாறு, பம்பரைப் பொருத்தியிருந்து அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீஸார் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரப் பகுதிகளில் இன்று நடைபெற்ற சோதனையில் 27 வாகனங்களுக்குத் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாகக் கோவை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே.பாஸ்கரன் கூறும்போது, "கடந்த 10 நாட்களாக நடைபெற்ற சோதனையில் 327 வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு மொத்தம் ரூ.3.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் இந்த சோதனை தொடரும்.

விபத்தின்போது பாதசாரிகளுக்கும், இதர வாகன ஓட்டிகளுக்கும் பம்பர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதால் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை வாகன உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x