

‘‘கூட்டணிக் கட்சியினர் என்ன சொன்னாலும் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்,’’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருமணவயல் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, நாகராஜன் எம்எல்ஏ, முன்னாள் எம்பி செந்தில்நாதன், ஒன்றியக்குழுத் தலைவர் பிர்லா கணேசன், துணைத் தலைவர் ராசாத்தி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவிற்குப் பிறகு ஜி.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள் கட்சிகள் என்ன சொன்னாலும் எங்கள் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான். விவசாயிகளுக்கு நன்மை தரும் திட்டங்களுக்கு ஆதரவு தருகிறோம்.
முதல்வர் பழனிசாமிக்கு யோகம் இருப்பதால் தான் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. உழவே என்னவென்று தெரியாதவர்கள் பச்சைத் துண்டைப் போட்டுக் கொண்டு விவசாயி என்று கூறுகின்றனர்.
முதல்வரும், துணை முதல்வரும் மருது சகோதரர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், ‘அந்த விவகாரத்தை எங்களது முதல்வரும், துணை முதல்வரும் பார்த்துக் கொள்வர்,’ என்று அமைச்சர் கூறினார்.
முன்னதாக நேற்றிரவு காரைக்குடியில் நடந்த பாஜக தேர்தல் ஆயத்தப் பணி தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், "2021-ம் ஆண்டு தேர்தலில் ஹெச்.ராஜாவை எம்எல்ஏவாக்கி தமிழக அமைச்சராக்க உள்ளோம். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் பாஜக கைகாட்டும் நபர்களே எம்எல்ஏ ஆவார்கள். மாநிலத் தலைவர் முருகன் முதல்வர் வேட்பாளர் குறித்து கூறிய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளரை எங்களது தேசிய தலைமை முறைப்படி அறிவிக்கும்" என்று கூறினார்.