

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் ரேஷன் கடைகளில் இன்று தொடங்கியது.
கரோனா தொற்று அச்சம் முழுமையாக விலகாத நிலையில் ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல் ரேஷன் கடைகளில் திரள்கிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வண்ணார்பேட்டையில் ரேஷன் கடை மூடப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தலா ரூ.2500 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதற்கான டோக்கன் விநியோகத்தை தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த சில நாட்களுக்குமுன் தொடங்கி வைத்திருந்தார். இதை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 796 நியாயவிலை கடைகள் மூலம் 4,57,098 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது.
இதுபோல் மாவட்டத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள 635 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் ரேஷன் கடைகளில் தொடங்கியதை அடுத்து ஏராளமானோர் ரேஷன் கடைகளில் திரண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் வந்திருந்தனர். கரோனா நோய் தொற்று அச்சம் முமையாக விலகாத நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கசவம் அணியாமலும் ஒரே இடத்தில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ரேஷன் கடை பணியாளர்கள் திணறினர். திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள ரேஷன் கடையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் டோக்கன் விநியோகம் திடீரென்று நிறுத்தப்பட்டது. ரேஷன் கடையும் மூடப்பட்டது.
சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவும், முககவசம் அணிந்தவர்களுக்கே டோக்கன் விநியோகிக்கப்படும் என்ற கண்டிப்புடனும் டோக்கன் விநியோகம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.