Published : 26 Dec 2020 06:08 PM
Last Updated : 26 Dec 2020 06:08 PM

உழைப்புக்கு அடிப்படையாக இருக்கும் சிந்தனையை வலுப்படுத்தும் ஆயுதம் புத்தகங்களே: கே.பாலகிருஷ்ணன் பேச்சு

உழைப்புக்கு அடிப்படையாக இருக்கும் சிந்தனையை வலுப்படுத்தும் ஆயுதமாகப் புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களே உலகைப் புரிந்துகொள்ளவும், புதிய உலகைப் படைக்கவும் திறவுகோலாக உள்ளன என்று கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

பாரதி புத்தகாலயம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் புத்தகங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை நடத்தி வருகிறது. 2021-ம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான புத்தகக் காட்சி பாரதி புத்தகாலயத்தில் (எண். 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயம் அருகில்) அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியை இன்று (டிச.26) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ‘‘குடியுரிமையும் குடியுரிமைச் சட்டமும்’’ எனும் நூலை கே.பாலகிருஷ்ணன் வெளியிட, திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் பெற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் விற்பனையைத் தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

''வாசிப்பு இயக்கத்தைத் தமிழகத்தில் சக்திமிக்க இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கிற பாரதி புத்தகாலயம், இந்த ஆண்டும் ‘புத்தாண்டை புத்தகங்களோடு கொண்டாடுவோம்’ என்ற நிகழ்வை நடத்துகிறது. கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் உழைப்புதான் இதர உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.

இந்த உழைப்புக்கு அடிப்படையாக இருக்கும் சிந்தனையை வலுப்படுத்தும் ஆயுதமாகப் புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களே உலகைப் புரிந்துகொள்ளவும், புதிய உலகைப் படைக்கவும் திறவுகோலாக உள்ளன.

மனிதரின் சொல் மணக்க வாசிப்பு அவசியம். தமிழ்ச் சமூகத்தின் சொல்லாற்றல், சிந்தனையாற்றல், செயலாற்றலை வளப்படுத்த அரிய புத்தகங்களை வெளியிட்டு, தமிழ்ச்சமூகத்தின் குரலாக பாரதி புத்தகாலயம் விளங்குகிறது. அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து சாதனை படைத்து வருகிறது.

மதவெறி சக்திகளும், உலகமயக் கொள்கையும் நாட்டை ஆட்டிப் படைக்கும் சூழலில் அதனை அம்பலப்படுத்தும் வகையில் புத்தக இயக்கமாக பாரதி புத்தகாலயம் செய்து வருகிறது. 2 ஆயிரம் தலைப்புகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் பதிப்பித்து, கருத்து ரீதியான பிரச்சாரத்தைச் செய்து வருகிறது. வலைதள எழுத்துருக்களை வடிவமைத்து தமிழுக்கு பாரதி புத்தகாலயம் சேவை செய்து வருகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகத்தை உருவாக்க வேண்டும். அதுதான் வளரும் சமூகத்திற்கு அறிவியல் தோற்றுவாயாக இருக்கும். புத்தகங்களோடு வாழப் பழக வேண்டும். பல நண்பர்கள் வந்தாலும், புத்தகம் என்ற நண்பன்தான் கடைசி மூச்சுவரை நம்மோடு பயணிக்கும். உற்ற தோழர்களை விட சிந்தனை வளத்தை அளிக்கக்கூடியவை புத்தகங்கள். புத்தகங்கள் சிறந்த எதிர்காலத்திற்கு வழிசெய்யக் கூடியவை. அனைத்துத் தமிழ் மக்களும் புத்தகத்தோடு புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்.

மக்கள் இயக்கங்கள் அனைத்திற்கும் அதிமுக தடை விதித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் செயல்படக் கூடாது, எதிர்க்கருத்துகள் வரக் கூடாது என்பதற்காகத் தடை விதிக்கிறார்கள். வழக்குப் போடுகிறார்கள். அதேபோன்று திமுகவின் கிராம சபைக் கூட்டத்திற்கும் தடை விதித்துள்ளார்கள். தடையெல்லாம் மக்கள் மத்தியில் நிற்காது. தடைகளையெல்லாம் மீறி அதிமுகவுக்கு எதிராக மக்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் வஞ்சிக்கும் வகையில் சட்டத்தைப் போட்டுவிட்டு, எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் பயனளிக்காது. எனவே, 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயத்தை வளர்க்க கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும். விளைபொருட்களுக்கு அடிமாட்டு விலை கிடைக்கும்போது, வாய்க்கரிசி போடுவதுபோல் திட்டங்களை அறிவிப்பதால் பயனில்லை.

எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையை அரசு அமல்படுத்தவில்லை. அடக்கவிலையைக் கணக்கிடும்போது அடிப்படையான அம்சங்களை அரசு கைவிட்டுவிடுகிறது. தனது பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்துகிறது என்று எம்.எஸ்.சாமிநாதன் ஒப்புக் கொள்வரா? .

யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ரஜினிகாந்த் பூரண நலம் பெற்று, நல்ல உடல் நிலையோடு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு சென்னை திரும்ப வேண்டும்''.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

50 சதவீத விலையில் புத்தகங்கள்

பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாளர் நாகராஜன் கூறுகையில், ''டிச.26 முதல் ஜனவரி 3 வரை கண்காட்சி செயல்படும். பாரதி புத்தகாலயத்தின் 25க்கும் மேற்பட்ட அனைத்து வெளியீடுகளுக்கும் 50 சதவீத சிறப்புக் கழிவு வழங்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x