Published : 26 Dec 2020 04:46 PM
Last Updated : 26 Dec 2020 04:46 PM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10.57 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10.57 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. முன்னுரிமை, முன்னுரிமையற்ற அரசி குடும்ப அட்டைதாரர்கள், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள், இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களைச் சேர்ந்தவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய ஒரு துணிப்பையுடன் ரூ.2,500 ரொக்கப் பணமும் வழங்கப்படும்.

10.57 லட்சம் குடும்ப அட்டைகள்

வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969, திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 288, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 520 குடும்ப அட்டைகள் என்று மொத்தம் 10 லட்சத்து 56 ஆயிரத்து 777 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற உள்ளனர். இவர்களுக்குத் தேவையான பொங்கல் பரிசுத் தொகுப்பை தயார் செய்யும் பணி கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

ரேஷன் கடைகளில் வரும் ஜனவரி 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. விடுபட்டவர்களுக்கு ஜனவரி 13-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

டோக்கன் விநியோகம்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என ஒருங்கிருணைந்த வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று (டிச. 26) தொடங்கியது.

ரேஷன் கடை பணியாளர்கள் தங்களுக்குரிய பகுதிகளில் டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். டோக்கனில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கான நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாளில் மட்டுமே பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற முடியும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 04172-273166, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 04179-222111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x