Published : 26 Dec 2020 11:00 AM
Last Updated : 26 Dec 2020 11:00 AM

பேரிடர் மீட்புப் பணியில் இறந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரண நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குக: வைகோ

பேரிடர் மீட்புப் பணியில் இறந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரண நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (டிச. 26) வெளியிட்ட அறிக்கை:

"கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அன்று, நிவர் புயல் தாக்கியபோது, காஞ்சிபுரம் அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மின் வயர்கள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மின் நிலைய அதிகாரியான சுந்தரராஜன், உதவிப் பொறியாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவசர வேலை என்பதால், பக்கத்து மின்நிலையத்தில் நிரந்தர ஊழியராகப் பணியாற்றும் பாக்கியநாதன் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் தயாளன் ஆகிய இருவரையும் செல்பேசியில் அழைத்து மின் இணைப்பைச் சரி செய்யக் கூறி உள்ளார். ஆனால், அவர்களை அந்தப் பணிக்கு அனுப்பிய விவரத்தை, சக பணியாளர்களுக்கு, அவர் தெரிவிக்கவில்லை.

அவர்கள் இருவரும், இரவு பதினொன்று முப்பது மணி அளவில், கையில் டார்ச் லைட்டுடன் மழைநீர் தேங்கி இருந்த பகுதிக்குச் சென்று, அறுந்து விழுந்து கிடந்த வயர்களைச் சுற்றிக் கொண்டு இருக்கும்போது, மின் நிலையத்திற்கு வந்த மற்றொரு பணியாளர், மின் இணைப்பைக் கொடுத்து விட்டார்.

இதனால் மின்சாரம் பாய்ந்து, பாக்கியநாதன், தயாளன் இருவரும் அந்த இடத்திலேயே இறந்து விட்டனர். உதவிப் பொறியாளர் சுந்தரராஜனின் கவனக் குறைவால், இரண்டு உயிர்கள் பறிபோய் விட்டன. அதனால், சுந்தரராஜன் உள்ளிட்ட நான்கு பேரை, தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இறந்தவர்களின் உடற்கூறு ஆய்வு செய்து உடலை ஒப்படைக்கும்போது, இரண்டு குடும்பத்தினரிடமும் தலா 3 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கி உள்ளனர்.

பாக்கியநாதன், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காஞ்சிபுரம் அடுத்த வெள்ளகேட் மின் நிலையத்தில் வயர் மேனாகப் பணியாற்றி வருகின்றார். மாத ஊதியம் 35 ஆயிரத்து 662 ரூபாய் பெற்று வந்துள்ளார்.

பணியின்போது இறந்த காவலர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் வழங்குகின்றது. எனவே, பேரிடர் மீட்புப் பணியின்போது இறந்த மின்வாரிய ஊழியர்கள் இருவருடைய குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாய் மறுவாழ்வு நிதியும், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x