Published : 26 Dec 2020 10:47 AM
Last Updated : 26 Dec 2020 10:47 AM

மீனவர்களுக்கான நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் தனி குழு அமைக்க வேண்டும்: தினகரன்

மீனவர்களுக்கான நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் தனி குழு அமைக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (டிச. 26) வெளியிட்ட அறிக்கை:

"பேரழிவை ஏற்படுத்திய சுனாமி தாக்கி 16 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆயிரக்கணக்கோரின் உயிரிழப்பும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான படகுகள், வலைகள் உள்ளிட்ட பொருட்களின் இழப்பும் மீனவர் குடும்பங்களில் ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் பெரியளவுக்கு சுனாமி மறுவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தாலும், பல இடங்களில் பணிகள் அரையும் குறையுமாக நிற்பதைக் கடலோரப் பகுதிகளில் பார்க்க முடிகிறது.

மேலும், சுனாமியில் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் பணியும் முழுமையடையாமல் இருப்பதாக மீனவர் அமைப்புகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. இதனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயத்தின் துயரங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. புயல், மழைக் காலங்களில் அவர்களது குடியிருப்புகள் மிக மோசமான நிலையில் இருப்பது வேதனை அளிக்கிறது.

சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் குறைபாடுகள் மலிந்து கிடக்கின்றன. எனவே, காலத்திற்கும் கண்ணீரிலேயே தங்கள் வாழ்க்கையை நகர்த்தும் மீனவ மக்களின் துயரை முற்றிலுமாக தீர்த்திடுவதற்கான நடவடிக்கைகளை இந்த சுனாமி நினைவு தினத்தில் இருந்தாவது மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

சுனாமி தாக்கிய மீனவர் பகுதிகளில் அவர்களுக்கான வீடு, சுகாதார வசதி,கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட சிறப்புத்திட்டங்களை வகுத்திட வேண்டும். ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட சுனாமி மறுவாழ்வுத் திட்டங்களின் நிலை குறித்து ஆராய்ந்து குறைகளைக் களைந்திடவும், காலத்திற்கேற்ற புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்திடவும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள், மீனவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைக் கொண்ட சிறப்புக்குழுவினைப் பழனிசாமி அரசு அமைத்திட வேண்டும்.

இக்குழுவினருக்கு காலக்கெடு நிர்ணயித்து, தமிழக மீனவர் பகுதிகளின் சீரமைப்புக்கும், மீனவர்களின் புனர்வாழ்வுக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்ய வேண்டும். இப்படி செய்வதே சுனாமியால் உயிரிழந்தோருக்கு ஆத்மார்த்தமான அஞ்சலியாகவும், பாதிக்கப்பட்டோருக்கான உண்மையான ஆறுதலாகவும் இருக்கும்".

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x