கடந்த ஓராண்டாக நிலவை சுற்றிவந்து சந்திரயான்-2 விண்கலம் சேகரித்த தரவுகளை வெளியிட்டது இஸ்ரோ: இணையதளத்தில் பார்க்கலாம்

கடந்த ஓராண்டாக நிலவை சுற்றிவந்து சந்திரயான்-2 விண்கலம் சேகரித்த தரவுகளை வெளியிட்டது இஸ்ரோ: இணையதளத்தில் பார்க்கலாம்
Updated on
1 min read

நிலவை சுற்றிவந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் கலன் கடந்த ஓராண்டாக சேகரித்து அனுப்பியுள்ள தரவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது. பல்வேறு கட்ட பயணத்துக்கு பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7-ம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. திடீர் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியதாக கூறப்படுகிறது.

அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர்,நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு, ஆர்பிட்டர் கடந்த ஓராண்டாக நிலவை சுற்றிவந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ஆர்பிட்டர் அனுப்பிய அறிவியல் தரவுகளின்வருடாந்திர அறிக்கையை கடந்த மார்ச்சில் வெளியிட திட்டமிடப்பட்டது. கரோனா பரவலால் ஊரடங்கு அமலானதால், ராக்கெட் ஏவுதல் மற்றும் ஆய்வுப்பணிகள் தடைபட்டன. தற்போதுதொற்று பரவல் தணிந்துள்ள நிலையில், ராக்கெட் ஏவுவது தொடர்பான பணிகளை இஸ்ரோ மீண்டும் முடுக்கிவிட்டது. கடந்தஒன்றரை மாதத்தில் 2 பிஎஸ்எல்வி ராக்கெட்கள் ஏவப்பட்டன.

அதைத் தொடர்ந்து, சந்திரயான்-2 விண்கலத்தின் அறிவியல்தரவுகள் கொண்ட தொகுப்பறிக்கையை இஸ்ரோ நேற்று முன்தினம் வெளியிட்டது. https://www.isro.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தரவுகளை அனைவரும் பார்க்கலாம்.

ஆர்பிட்டரில் உள்ள எக்ஸ்ரேஸ்பெக்ட்ரோ மீட்டர், சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார், 3டி கேமராக்கள் உட்பட 8 விதமான ஆய்வுசாதனங்கள் மூலம் கிடைக்கப் பெற்ற படங்கள், தரவுகள் அந்தஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், நமது பல்வேறு கேள்விகளுக்குப் பதில்கிடைத்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-2 ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், நமது பல்வேறு கேள்விகளுக்குப் பதில்கிடைத்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in