

பிரதமர் மோடி நேற்று காணொலிக்காட்சி மூலம் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த காணொலி நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி அடுத்த கோதிகுட்லப்பள்ளி கிராமத்தைச்சேர்ந்த விவசாயி சுப்பிரமணியிடம் பிரதமர் பேசினார்.
பிரதமர் மோடி பேசும்போது, ‘‘உங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதா?’’ என்று கேட்டார். இதற்கு விவசாயி சுப்பிரமணி பதிலளித்து பேசியதாவது:
ரூ.1 லட்சம் லாபம்
எங்களுக்குச் சொந்தமான 4ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கரில் தக்காளி,1 ஏக்கரில் பட்டன் ரோஜா நடவுசெய்துள்ளோம். தோட்டக்கலைத்துறை மூலம் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாயம் மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு வடிகால் முறையில் ஒருஏக்கர் நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடிந்தது.
அப்போது எங்களுக்கு ரூ.40ஆயிரம் மட்டுமே லாபம் கிடைத்தது. தற்போது 100 சதவீத மானியத்தில் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்ததில், இந்த ஆண்டு செலவு ரூ.40 ஆயிரம் போக மீதி ரூ.1 லட்சம் லாபம் கிடைத்துள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்து பிரதமர்மோடி பேசும்போது, ‘‘சுப்பிரமணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள்சொட்டு நீர் பாசனம் அமைத்துவிவசாயம் மேற்கொண்டதால் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, பலன் அடைந்துள்ளீர்கள். உங்களுக்கு சொட்டு நீர் பாசனம்மூலம் பாசனப் பரப்பும், விளைச்சலும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக விவசாயிகளிடம் நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வணக்கம். நன்றி’’ என்றார்.