Last Updated : 25 Dec, 2020 08:22 PM

 

Published : 25 Dec 2020 08:22 PM
Last Updated : 25 Dec 2020 08:22 PM

திருநள்ளாறில் நாளை முதல் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு

திருநள்ளாறில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பயணிகள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்.

காரைக்கால்

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கரோனா 'நெகட்டிவ்' சான்றுடன் வருவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை மறு பரிசீலனை செய்யாவிட்டால் நாளை முதல் திருநள்ளாறில் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருநள்ளாறு பயணிகள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜே.எஸ்.லெனின்ராஜ், வர்த்தகர்கள் சங்கத் தலைவர் ஜே.ஸ்ரீதர், கவுரவத் தலைவர் பி.தர்பாரண்யம் ஆகியோர் கூட்டாக திருநள்ளாறில் இன்று (டிச. 25) செய்தியளர்களிடம் கூறியதாவது:

"சனிப்பெயர்ச்சி விழா தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், அனைத்து பக்தர்களையும் உரிய பரிசோதனை செய்ய வேண்டும், அதிக அளவில் உடல் வெப்ப நிலை உள்ளவர்களுக்கு மட்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரக்கூடிய அனைவரும் கரோனா 'நெகட்டிவ்' சான்றுடன் வரவேண்டும் என்ற அறிவிப்பு எங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆகம விதிப்படி, இந்து மத நம்பிக்கையின்படி நளன் குளத்தில் குளித்து விட்டுதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். ஆனால், நளன் குளத்தில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் முடிவால் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

இந்த முடிவால் பலதரப்பட்ட வியாபாரிகளும், பக்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் அனைத்தையும் நாங்களும், இங்குள்ள மக்களும் பின்பற்ற தயாராகவே உள்ளோம்.

அதனால் எல்லோரும் கரோனா 'நெகட்டிவ்' சான்றுடன் வரவேண்டும் என்ற முடிவை மறுபரிசீலனை செய்து, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அறிகுறிகள், பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். நளன் குளத்தில் 'ஸ்பிரே' மூலம் பக்தர்கள் மீது நீரை தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக இன்றுக்குள் உரிய முடிவு அறிவிக்கப்படாவிட்டால் நாளை (டிச. 26) முதல் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x