Published : 25 Dec 2020 08:20 PM
Last Updated : 25 Dec 2020 08:20 PM

இட ஒதுக்கீடு போராட்டத்துக்கும் கட்சி கூட்டணிக்கும் சம்பந்தமில்லை: பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து

வேலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் பாமக தலைவர் ஜி.கே.மணி.

வேலூர்

20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் உரிமைக்கானது என்பதால் கட்சியின் கூட்டணிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று, பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக, வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு குறித்து பொதுக்குழு கூட்டம் இன்று (டிச. 25) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாமக மாநில துணை பொதுச் செயலாளர் கே.எல்.இளவழகன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் பி.கே.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் சுரேஷ், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ஜி.குமார், மாநகர செயலாளர் சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றுப் பேசினார். இதில், மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம், மகளிர் அணி தலைவி வரலட்சுமி, மாநில துணை தலைவர் சி.கே.ரமேஷ்நாயுடு, மாநில வன்னியர் சங்க செயலாளர் எம்.கே.முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வன்னியர்களுக்கு தனியாக கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக வரும் 30-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு பின்னர் பாமக தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறும்போது, "வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு வருகிற 30-ம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும். எங்களது போராட்டத்துக்கு மாற்று கட்சியில் உள்ள வன்னியர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். எங்களது இந்தப் போராட்டம் உரிமைக்கானது. கட்சியின் கூட்டணிக்கும், போராட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். தேர்தல் வருவதால் தாமதப்படுத்தக் கூடாது. புயல் சேதத்துக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. எங்கள் போராட்டத்தை திமுக கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x