

பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல டிசம்பர் 28-ம் தேதி முதல் ரோப்கார் இயக்கப்படவுள்ளதாக கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலில் கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆறு கால பூஜைகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதையடுத்து, படிப்பாதை வழியாக மட்டும் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் வயது முதிர்ந்தோர், சிறுவர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல முடியவில்லை.
இதையடுத்து, கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டு மின்இழுவை ரயில் (வின்ச்) மட்டும் இயக்கப்பட்டது.
தற்போது ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் விரைவில் சென்றுவர வசதியாக இயக்கப்படும் ரோப்கார் சேவையை டிசம்பர் 28-ம் தேதி முதல் இயக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பாடி இன்று (டிச. 25) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
"காலை 7 மணிமுதல் பகல் 1.30 மணிவரையிலும், பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணிவரையிலும் டிசம்பர் 28 முதல் தினமும் ரோப்கார் இயக்கப்படவுள்ளது. கட்டண தரிசனம் அல்லது பொது தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு (http://tnhrce.gov.in) செய்தவர்களுக்கு மட்டுமே ரோப்காரில் செல்ல அனுமதியளிக்கப்படவுள்ளது. நாள் ஒன்றுக்கு முதலில் வரும் 1,500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ரோப்காரில் செல்ல ஒரு நாள் முன்னதாக தொலைபேசியில் (0445- 242683) தொடர்புகொண்டு தெரிவித்து முன்னுரிமை பெற்று ரோப்காரில் செல்லலாம்.
தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி வெப்பநிலை சோதித்தபிறகே ரோப்காரில் செல்ல அனுமதிக்கப்படுவர்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.