தமிழ்நாடு வேளாண் ஒப்பந்த சட்டத்தை ரத்து செய்ய கோரி வழக்கு; விசாரணை தள்ளிவைப்பு

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை: கோப்புப்படம்
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஒப்பந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளிவைத்தது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

"தமிழகத்தில் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை மற்றும் சேவைச் சட்டம்-2019 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தால் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஒரு விவசாயி நேரடியாக தனியார் ஒப்பந்ததாரருடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். இதற்காக ஒப்பந்ததாரர் விரும்பிய இடத்தில் முகாம் அமைத்து அவர்களது விலைக்கு கொள்முதல் செய்ய முடியும். அதே நேரத்தில் விவசாயத்தின் போது ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பயிர்காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்த முடியாது.

விவசாய ஒப்பந்தம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நேரடியாக நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியாது. இதற்கென அமைக்கப்பட்ட வருவாய் கோட்ட குழுவின் மூலமே தீர்வு காண முடியும். இதை எதிர்த்து மாவட்ட அளவிலான குழுவில் தான் அப்பீல் செய்ய முடியும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் இந்தச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்த சட்டம்-2019 அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். அந்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்".

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று (டிச. 25) விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரணையை தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in