Last Updated : 25 Dec, 2020 04:18 PM

 

Published : 25 Dec 2020 04:18 PM
Last Updated : 25 Dec 2020 04:18 PM

காரைக்கால் சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியில் பாதுகாப்பிலிருந்த 2 போலீஸாருக்கு கரோனா; பக்தர்களுக்கு பரிசோதனை முடிவு கட்டாயம்: ஆட்சியருக்கு கிரண்பேடி உத்தரவு

காரைக்கால் சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியில் பாதுகாப்பில் இருந்த இரு போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பரிசோதனை முடிவுடன் வரும் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவான் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வரும் 27-ம் தேதி சனிப்பெயர்ச்சி தொடங்கி பிப்ரவரி 12-ம் தேதி (48 நாட்கள்) வரை நடைபெறவுள்ளது.

கரோனா விதிமுறைகள் அமலில் இருப்பதால் சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என்று தர்பாரண்யேஸ்வரர் கோயில் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்க தலைவர் நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சனிப்பெயர்ச்சி விழாவை நடத்த தடையில்லை, ஆளுநர், மாவட்ட ஆட்சியர், கோயில் அறங்காவலர் குழு இணைந்து பக்தர்களை அனுதிப்பது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடந்த கூட்டத்தில், சனிபகவானை தரிசிக்க 48 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும், அதிகபட்சமாக ஒரு முறை 200 பேரை அனுமதிக்கலாம், கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (டிச. 25) காரைக்காலில் சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 2 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, எஸ்.பி. பாஸ்கரின் கீழ் வயர்லஸ் பிரிவில் பணியாற்றும் காவலருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஆளுநர் கிரண்பேடி, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவுக்கு ஆடியோ பதிவு மூலம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

"திருநள்ளாறு சனிபகவான் கோயிலுக்கு சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வருவோர் கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்து சான்றிதழுடன் வரவேண்டும். தொற்றில்லை என்று அண்மையில் எடுத்த பரிசோதனை சான்றுடன் வருவோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சனி பகவான் கோயில், மருத்துவமனை அல்ல. வழிப்பாட்டு தலம். அத்துடன் ஆன்லைன், தொலைக்காட்சிகள் மூலம் சனிப்பெயர்ச்சி விழாவை பார்க்கலாம். அதேபோல், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க செல்லும் ஊடகத்துறையினரும் மருத்துவ சான்றிதழுடன் வரவேண்டும். தொடர்ந்து பரிசோதனைகள் நடத்துவது மக்களின் சேவை பணியில் உள்ளவர்களுக்கு அவசியமான ஒன்று".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

காவல் துறையினருக்கு பரிசோதனை

இந்நிலையில், திருநள்ளாறு பாதுகாப்பு பணிக்கு புதுவையிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் செல்ல உள்ளனர். அவர்களுக்கு கோரிமேடு காவலர் சமுதாயநலக்கூடத்தில் இன்று கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டும் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர். அத்துடன் புதுச்சேரியில் இருந்து செல்லும் பத்திரிகையாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x