Last Updated : 25 Dec, 2020 04:03 PM

 

Published : 25 Dec 2020 04:03 PM
Last Updated : 25 Dec 2020 04:03 PM

இந்துக்களின் நம்பிக்கையாக உள்ள சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் குலைத்திருக்கிறர்: அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் குற்றச்சாட்டு

இந்துக்களின் நம்பிக்கையாக உள்ள சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் குலைத்திருக்கிறர் என, புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் விருந்தினர் இல்லத்தில் இன்று (டிச. 25) அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"சனிப்பெயர்ச்சி விழாவை நடத்தக்கூடாது என்று திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில், சனிப்பெயர்சி விழாவை நடத்தலாம், என்னென்ன அடிப்படைகளில் விழாவை நடத்த வேண்டும் என வழக்கில் தொடர்புடைய வாதி, பிரதிவாதிகள் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டது.

அதனடிப்படையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நடத்திய கூட்டத்தில், "விழா நடத்தலாம், ஆனால் நடத்தக்கூடாது" என்ற ஒரு நிலைக்கு, வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்கி, சனிப்பெயர்ச்சி விழாவையே கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

கோயிலுக்குள் வரும் பக்தர்கள், கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட எவர் ஒருவரும் கரோனா 'நெகட்டிவ்' சான்றுடன் வர வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். ஆளுநரின் தலையீடே இதற்கு காரணம். தொடர்பே இல்லாமல் துணைநிலை ஆளுநர் தாமாக முன் வந்து இந்த வழக்கில் வலிந்து தன்னை இணைத்துக் கொண்டு இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் பெரிய அளவில், இயற்கை வளமோ, வருவாயோ இல்லாத மாநிலம். கரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக வருவாய் இல்லாமல் அரசும், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசும் நிதி கொடுக்கவில்லை.

காரைக்காலின் அடையாளமாக திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, ஒரு மாத காலத்துக்கு சுமார் 10 லட்சம் பக்தர்கள் வந்து இறைவனின் அருளை பெற்றுச் செல்வர். அதன் மூலம், காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருக்கும் வருவாய் கிட்டும். அனைத்து தரப்பினரின் வருவாயையும் பாதிக்கச் செய்துள்ளார்.

கரோனா தொற்று குறைவாக உள்ள தற்போதைய நிலையில், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கூட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து செல்கின்றனர். மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்படி, கோயில்கள் திறக்கப்பட்டு, கரோனா தடுப்பு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்துக்களுக்கான அரசு என்று சொல்லக் கூடிய, மத்திய பாஜக அரசு நியமித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர், இந்துக்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ள சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியை குலைத்திருக்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவை ஒட்டுமொத்தமாக பாதிக்கச் செய்திருக்கிறார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமை இறை வழிபாடு. ஆளுநரின் இந்த நடவடிக்கையால் மக்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களை பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாக்கி கோயிலுக்கு வராமல் தடுக்கும் வகையில் இந்த முடிவுகள் உள்ளன.

உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு, அதில் சந்தேகப்படும்படி உள்ளோருக்கு கரோனா பரிசோதனை செய்வது அல்லது அவர்களுக்கு அனுமதி மறுப்பது என்பதுதான் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படும் வழிமுறை.

ஆனால், கோயிலுக்கு வரும் அனைவரும் 48 மணிநேரத்துக்குள்ளாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையின்படி 'நெகட்டிவ்' சான்று உள்ளவர்கள், 'ஆரோக்கிய சேது' செயலி பதிவிறக்கம் செய்தவர்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் கோயிலுக்கு வரவேண்டும் என ஆளுநர் நினைக்கிறாரா? மக்களின் நம்பிக்கையை அழிக்கக்கூடிய மிக மோசமான அணுகுமுறை இது.

கடந்த ஒன்றரை மாதங்களாக சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் அவ்வப்போது ஆளுநருக்கு தெரிவித்து வருகிறார். அப்போதெல்லாம் எதுவும் சொல்லாமல், தற்போது நீதிமன்ற வழிகாட்டு முறைகளை மிகைப்படுத்தி இவ்வாறு செய்துள்ளார். மத வழிபாட்டு உரிமையை தடுத்து நிறுத்தக்கூடிய ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து மத்திய அரசும், இங்குள்ள பாஜகவினரும் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றால் ரூ.6 கோடி அளவுக்கு கோயிலுக்கு வருவாய் கிடைக்கும்.

பல்வேறு தரப்பினரும் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். இது குறித்து நீதிமன்றம் சென்று சட்ட ரீதியாக தளர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன். முயற்சி எடுப்பதாக அவர் கூறியுள்ளார். சனி பகவானுக்கே சனிப்பிடித்த சூழலை உருவாக்கியோரை பகவான் தான் கேட்க வேண்டும்.

ஏற்கெனவே முன்பதிவு செய்து திருநள்ளாறு வரக்கூடிய பக்தர்களுக்கு 'ஆன்டிஜன்' முறையிலான பரிசோதனை இங்கேயே எடுக்க முடியுமா என்பது குறித்தும் பரிசீலிக்க கோரியுள்ளேன் என்றார்.

கரோனா பரவல் காலத்திலும், புயல் - மழை காலத்திலும் வெளியில் வந்து மக்களுக்கு எதுவும் செய்யாத ஆளுநர், தற்போது மட்டும் இங்கு வந்து அவசரம் காட்டுவது ஏன்? புதுச்சேரி மக்கள் வளமாக இருப்பதற்கும், தெய்வ நம்பிக்கைக்கும் எதிரானவர் என்பது தெளிவாக புலப்படுகிறது. மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x