

அறிவிப்புகளை திரும்ப பெறும் அரசாக அதிமுக அரசு உள்ளது என, திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
அரியலூர் மாவட்டத்தில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பெயரில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (டிச. 24) முதல் ஈடுபட்டு வருகிறார். இன்று (டிச. 25) செந்துறை அடுத்த குழுமூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வின் காரணமாக மருத்துவ இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட குழுமூர் மாணவி அனிதாவின் நினைவு நூலகத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நூலக வளாகத்தில் தென்னங்கன்றை நட்டுவைத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "அதிமுக அரசு அறிவிப்புகளை திரும்பப்பெறும் அரசாக உள்ளது.
கரோனா காலக்கட்டத்தில் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தியே தீருவோம் என அதிமுக அரசு அறிவித்தது. திமுக எதிர்த்ததால் திரும்பப்பெற்றது. அதே போல், திடக்கழிவு மேலாண்மை பயணாளர் கட்டணம் வசூலிப்பதை திமுக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து திரும்பப்பெற்றது.
திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்தில் மக்கள் எழுச்சியுடன் குறிப்பாக, தாய்மார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். இதனால் கூட்டத்தை அதிமுக அரசு தடுக்கிறது.
என்ன தடை விதித்தாலும் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெறும், நானும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வேன்.
பொதுமக்கள் கரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.5,000 கொடுக்க சொன்னவர் ஸ்டாலின். அப்போது நிதி இல்லை என கூறிய ஆளும் அரசு,தற்போது ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2,500 அறிவித்துள்ளது. ஸ்டாலின் இன்னும் ரூ.2,500 வழங்க கூறியுள்ளார்.
நான் எதிர்பார்த்ததைவிட மக்கள் எழுச்சியுடன் உள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாக நீட் தேர்வை ரத்து செய்வோம்" என்றார்.