Published : 25 Dec 2020 12:46 PM
Last Updated : 25 Dec 2020 12:46 PM

தமிழ் மொழியின் மீது பற்றும், பாசமும் கொண்டவர் தொ.பரமசிவன்: முதல்வர் பழனிசாமி இரங்கல்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

தமிழ் மொழியின் மீது பற்றும், பாசமும் கொண்டவர் தொ.பரமசிவன் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் நேற்று (டிச. 24) காலமானார். அவருக்கு வயது 70.

'அறியப்படாத தமிழகம்', 'அழகர் கோயில்', 'பண்பாட்டு அசைவுகள்' போன்ற இவரது நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றவை. 'வழித்தடங்கள்', 'சமயங்களின் அரசியல்', 'விடுபூக்கள்', 'உரைகல்', 'மானுட வாசிப்பு', 'மஞ்சள் மகிமை', 'மரபும் புதுமையும்' உள்ளிட்ட பல நூல்களை தொ.பரமசிவன் எழுதியுள்ளார்.

தொ.பரமசிவன்: கோப்புப்படம்

அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இன்று (டிச. 25) வெளியிட்ட இரங்கல் செய்தி:

"திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளரும், எழுத்தாளரும், பேராசிரியரும், மாணவர்களாலும், வாசகர்களாலும் 'தொ.ப' என அன்போடு அழைக்கப்பட்ட தொ.பரமசிவன் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

தொ.பரமசிவன் இளையான்குடியில் உள்ள ஜாகிர்உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் பேராசிரியராகவும் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை தலைவராகவும் பணியாற்றியவர்.

தொ.பரமசிவன் பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், போன்ற பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு வரலாற்று வரைவுத் திட்டத்தில் உறுப்பினராக பணியாற்றியவர். பல நூல்களை எழுதியவர். இவர் எழுதிய 'அழகர் கோயில்' மற்றும் 'அறியப்படாத தமிழகம்' போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் 'அழகர் கோயில்' என்ற நூல், கோயில் ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2017-ம் ஆண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் தொ.பரமசிவனுக்கு 'உலகத் தமிழ் பண்பாளர் விருது' வழங்கி கவுரவித்தது.

தமிழ் மொழியின் மீது பற்றும், பாசமும் கொண்ட தொ.பரமசிவனின் மறைவு அவர்தம் குடும்பத்திற்கும், தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x