மாணவி அனிதா இல்லத்துக்கு இன்று செல்கிறார் உதயநிதி ஸ்டாலின் 

உதயநிதி: கோப்புப்படம்
உதயநிதி: கோப்புப்படம்
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வின் காரணமாக மருத்துவ இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட குழுமூர் மாணவி அனிதாவின் இல்லத்துக்கு செல்கிறார்.

அரியலூர் மாவட்டத்தில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பெயரில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (டிச. 24) முதல் ஈடுபட்டு வருகிறார்.

அரியலூர், கீழப்பழுவூர், இலந்தைகூடம், திருமானூர், தா.பழூர்,ஜெயங்கொண்டம் பகுதிகளில் பொதுமக்களை நேற்று சந்தித்த அவர், "அதிமுகவை ஓரம் கட்டுவோம், திமுகவை ஆட்சியில் அமர்த்துவோம்" என பேசினார்.

இலந்தைகூடம் கிராமத்தில் பேசுகையில், கண்டராதித்தம் பேரேரி தூர்வாருவதில் ஊழல் நடந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இது குறித்து தலைவர் ஸ்டாலின் விசாரணை மேற்கொள்வார் எனவும், ஊழலில் ஈடுபட்டுள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் எனவும் தெரிவித்தார்.

தஞ்சை, அரியலூர் சாலை மற்றும் அரங்க மேடையின் முன்பகுதியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்தனர். அப்போது, திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர எழுச்சியுடன் இருப்பது தெரிகிறது என்றார், உதயநிதி.

தொடர்ந்து, தா.பழூரில் அண்ணா, கருணாநிதி மற்றும் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் க.சோ.கனேசன் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆண்டிமடத்தில் மறைந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று (டிச. 25) செந்துறை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் உதயநிதி மதியத்துக்கு மேல் பெரம்பலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in