

முப்பரிமாண (3-டி) தொழில்நுட்பம் கொண்ட பிரின்ட் மூலம் 700 சதுர அடி பரப்பளவிலான வீட்டை கட்டி புதிய சாதனையை படைத்துள்ளது லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம்.
தரை தளம் மற்றும் முதல் தளம்கொண்டதாக இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகை தொழில்நுட்பம் மூலம் வீடு கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். 2022-ம் ஆண்டுக்குள் 6 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை எட்ட இத்தகைய நவீன தொழில்நுட்பம் நிச்சயம் உதவும்.
தானியங்கி ரோபோ தொழில்நுட்பம் மூலம் இத்தகைய வீடுகளை கட்ட முடியும் என்று இந்நிறுவனத்தின் கட்டுமான பிரிவின் மூத்த செயல் துணைத் தலைவர் எம்.வி. சதீஷ் தெரிவித்துள்ளார். இத்தகைய தொழில்நுட்பம் வீடுகளை விரைவாகக் கட்டி முடிக்க உதவுவதோடு கட்டுமானத்தின் தரத்தையும் உயர்த்தும் என்று குறிப்பிட்டார்.
இந்த வீடு, நிறுவனத்தின் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது. வழக்கமான கட்டுமான தொழில்நுட்பத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. 106 மணி அச்சிடும் நேரத்தில் (பிரின்ட் டைம்) இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் 3-டி பிரின்டர் இந்த வீட்டை கட்டி முடித்துள்ளது.
3டி நுட்பமானது இயந்திரங்களின் நுட்பமான பகுதிகளை சிறிய அளவில் (புரோடோடைப்) உருவாக்கபயன்படுத்தப்படும். அதன் செயல்திறனைப் பொறுத்து அதை பெரிய அளவில் வடிவமைத்து இயக்குவர். இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சோதனை அடிப்படையில் 240 சதுர அடி பரப்பளவிலான வீட்டை இந்நிறுவனம் இதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.