Published : 25 Dec 2020 03:15 AM
Last Updated : 25 Dec 2020 03:15 AM

அன்பு, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை வளர்ந்தோங்கச் செய்வோம்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

மக்களிடையே அன்பு, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை வளர்ந்தோங்கச் செய்வோம் என்று தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: இயேசு பிறந்த இந்த நன்னாளில் அனைவரும் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்ந்தோங்கச் செய்து அதன்மூலம் மனிதகுலம் யாவற்றுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முன்வர வேண்டு்ம். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் சந்தோஷம், சமாதானம், செழிப்பு, நல்வாழ்வு ஆகியவற்றை தழைத்தோங்கச் செய்திட வாழ்த்து கிறேன்.

முதல்வர் பழனிசாமி: இயேசு போதித்த அன்பு, தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய நெறிகளை மக்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தால், உலகம் அமைதிப் பூங்காவாக பூத்துக் குலுங்கும். கிறிஸ்தவ மக்களின் நல்வாழ்வுக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்ல நிதியுதவி வழங்கும் சிறப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இயேசுமீது பற்றும், அவர் போதித்த அறநெறியின் மீது மிகுந்த ஈடுபாடும் கொண்டு வாழ்ந்த எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எங்கள் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: கிறிஸ்தவ சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், கிறிஸ்தவ சமுதாயப் பெருமக்களின் கல்விக்கும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மாநில சிறுபான்மையினர் நல ஆணையம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் போன்றவற்றை உருவாக்கினார்.

கிறிஸ்தவர்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட கட்டங்களில், மதச்சார்பற்றஇந்தியாவைப் பாதுகாத்திட அண்ணா, கருணாநிதி காலங்களில் இருந்து இன்றுவரை திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: திராவிட மொழிகளின் ஒப்பு இலக்கணம் தந்தகால்டுவெல், திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த ஜி.யு.போப், தேம்பாவணி தந்த வீரமா முனிவர், தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்கு, கடற்கரை வாழ் மக்களுக்கு ஊழியம் புரிந்த புனித சேவியர் அடிகளார், திருச்சபை சேவை செய்து கொலையுண்டு மடிந்த தோமையார், ஜான் பிரிட்டோஉள்ளிட்ட இயேசு சபை அருட் தந்தையரும், போதகர்களும் ஆற்றிய அரும்பணிக்கு, தமிழ் இனம் நன்றிக் கடன்பட்டு இருக்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இன்று உலகில் அன்பு பற்றாக்குறையும், வெறுப்பு உபரியும்தான் காணப்படுகிறது. இந்த நோய்களுக்கு சிறந்த மருந்து இயேசு பிரானின் போதனைகள்தான். அந்த மருந்தை அனைவரும் உட்கொள்வது கட்டாயம் ஆகும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பாஜக ஆட்சியில் அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இதை காந்தி, நேரு வழியில் வந்த மதச்சார்பற்ற சக்தியினர் அனுமதிக்கமாட்டார்கள்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால் இந்த உலகில் முடியாதது எதுமில்லை என்ற இயேசுவின் சொற்களை மனதில் பதித்து, நீங்கள் செய்ய நினைக்கும் நல்ல செயலை, உங்களுக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்துவிடுங்கள் என்ற அவரது வழிகாட்டுதலின்படி பு சாதனைகளை படைத்திடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்திருமாவளவன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, பாரிவேந்தர் எம்பி., காங்கிரஸ் எம்பி. திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், சமக தலைவர் சரத்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தி.தேவநாதன், தமிழ்நாடுமுஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா,மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x