Published : 25 Dec 2020 03:16 AM
Last Updated : 25 Dec 2020 03:16 AM

அயோத்தி ராமர் கோயில் கட்ட நிதி சேகரிப்பு: ஜன.15-ம் தேதி தொடங்குவதாக விஎச்பி பொதுச் செயலாளர் தகவல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வரும் ஜன.15-ம் தேதிமுதல் நிதி சேகரிக்கப்பட உள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) அகில உலக பொதுச் செயலாளர் மிலிந்த் பராந்தே தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் நேற்று கூறியதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பு கடந்த பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 5 கோபுரங்கள், 3 தளங்களுடன் கோயிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயில் கட்டும் பணியில் தங்கள்பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் விரும்புவார்கள். இப்பணியில் அவர்களுக்கு உதவுமாறு விஸ்வஹிந்து பரிஷத்தை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, ஜன.15-ம் தேதி முதல் பிப்.27-ம் தேதி வரை மாபெரும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோயில் கட்டும் பணியில் பக்தர்கள் எவ்வாறு பங்கேற்க முடியும் என்பது குறித்து விளக்குவதுடன், அவர்களிடம் இருந்து நன்கொடையும் பெறப்படும்.

இப்பணி வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பதால், ரூ.10, ரூ.100, ரூ.1,000 மதிப்பிலான கூப்பன்கள், ரசீது புத்தகங்கள் தன்னார்வலர்களிடம் இருக்கும். மக்கள் தொடர்பு திட்டம் மூலம் 4 லட்சம் கிராமங்களில் சுமார் 11 கோடி குடும்பங்களை தொடர்புகொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டின்பல்வேறு பகுதிகளிலும் நகர்ப்புறம், கிராமப்புறம், பழங்குடியினர் பகுதிகள், மலைப் பகுதிகள்என சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தில் இருந்தும் அதிகப்படியான மக்களை ராமஜென்ம பூமிதீர்த்த ஷேத்ராவுடன் கைகோர்க்கச் செய்து, ராமர் கோயில் உருவாக்கும் பணி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x