

மழைக்காலங்களில் பெருக் கெடுத்து ஓடும் நீரை பயன்படுத்த தடுப்பணை அமைக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி வருவதாக ராவணாபுரம் ஊராட்சி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்டது ராவணாபுரம் ஊராட்சி. மேற்குத்தொடர்ச்சிமலைகளை ஒட்டிய கிராமங்களில் இதுவும் ஒன்று. சுமார் 3000 பேரை மக்கள் தொகையாக கொண்டது. இந்த ஊராட்சியின் தெற்கே மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தொடங்கி கேரளாவை நோக்கிப் பாயும் பாலாறு வரை தொடர்கிறது வரப்பள்ளம். மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும் சமயங்களில், காண்டூர் கால்வாயை பலமுறை சேதப்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே காண்டூர் கால்வாயின் கீழ் பகுதியில் ‘சூப்பர் பாசேஜ்’ என்ற திட்டத்தின் மூலம் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மலைகளில் இருந்து வரப்பள்ளம் வழியாக பாயும் மழை நீர், காண்டூர் கால்வாயின் சுரங்கப் பாதை வழியாக வெளியேறி பாலாற்றை அடைகிறது. ஆண்டு தோறும் கிடைக்கும் மழை நீரை விவசாயிகள் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘ராவணாபுரத்தைச் சுற்றிலும் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் வேளாண் சாகுபடி நடைபெறுகிறது. இவை அனைத்தும் பிஏபி திட்டத்தில் பயன்பெறாதவை. ஆழ்குழாய் அல்லது கிணற்றுப் பாசனத்தை மட்டும் நம்பியுள்ளன. வரப்பள்ளத்தில் தடுப்பணை கட்டினால், ஆண்டு முழுக்க அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இதற்காக கடந்த 20 ஆண்டுகளாக ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆட்சியர் உட்பட ஊரக வளர்ச்சி, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை’’ என்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம் கூறும்போது, ‘‘ஊரகவளர்ச்சித் துறை சார்பில் 20-க்கும்மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ராவணாபுரம் ஊராட்சியில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக எந்தக்கோரிக்கையும் எனது கவனத்துக்கு வரவில்லை. இதுகுறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.