

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக பெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்ய நடத்தி வந்த விசாரணை நேற்று முடிவுக்கு வந்தது. விரைவில், அந்த விசாரணை அறிக்கை நசரத்பேட்டை போலீஸாரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர ஹோட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14-ம் தேதி நள்ளிரவில் கைது செய்தனர்.
இதற்கிடையே பதிவு திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால், இது தொடர்பாக பெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்ய கடந்த 14-ம் தேதி முதல் விசாரணையில் ஈடுபட்டு வந்தார்.
இதில், முதல் நாள் விசாரணையில் சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, கடந்த 15, 17 ஆகிய தேதிகளில், ஹேம்நாத்தின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தினார். பிறகு, சித்ராவுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள், இரு வீட்டாரின் அண்டை வீட்டார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில், நேற்று சித்ராவின் உதவியாளரான ஆனந்த் என்பவரிடம் கோட்டாட்சியர் திவ்ய விசாரணை நடத்தினார். ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்தவிசாரணையோடு, சித்ரா தற்கொலை தொடர்பாக கோட்டாட்சியரின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது விசாரணை அறிக்கையை தயாரிப்பதற்கான பணிகளில் கோட்டாட்சியர் அலுவலகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எனவே, விரைவில் விசாரணை அறிக்கை நசரத்பேட்டை போலீஸாரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கோட்டாட்சியர் திவ்ய தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், சித்ரா தற்கொலை வழக்கின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.