

காஞ்சிபுரம், செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் எம்ஜிஆரின் 33-ம்ஆண்டு நினைவு நாள் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அவரது படத்துக்கு அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
காஞ்சியில் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக செயலர் வி.சோமசுந்தரம் தலைமையில் ஓரிக்கை, காந்தி சாலை, பூக்கடை சத்திரம், மேட்டுத் தெரு, கருக்குப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
முத்தியால்பேட்டை மற்றும் வாலாஜாபாத் போன்ற பகுதிகளில் அதிமுக அமைப்பு செயலர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலிதிருநாவுக்கரசு மற்றும் காஞ்சி பன்னீர்செல்வம், ஆர்.டி சேகர், தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
செங்கை மாவட்டத்தில் தாம்பரம் சண்முகம் சாலையில் எம்ஜிஆர் படத்துக்கும், தாம்பரம் பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆர் சிலைக்கும் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் டிகேஎம் சின்னையா கலந்துகொண்டார். இதே போல் செங்கை மாவட்டம் முழுவதும் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
செங்கை மாவட்டம், திருப்போரூரில் தண்டரை மனோகரன் தலைமையில் எம்ஜிஆர் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நகரச் செயலர் முத்து மற்றும் டிடி.மோகன், தேவசித்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருக்கழுக்குன்றத்தில் மாவட்டச் செயலர் ஆறுமுகமும் மாமல்லபுரம், கல்பாக்கம், கேளம்பாக்கம் பகுதிகளில் அக்கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பட்டாபிராம், வடமதுரை, ஊத்துக்கோட்டை பகுதிகளில் எம்ஜிஆர் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி என பல்வேறு பகுதிகளிலும் எம்ஜிஆர் படத்துக்கு அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.