தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை அமைச்சர்கள் சந்தித்தது ஏன்?

தங்கமணி
தங்கமணி
Updated on
1 min read

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி ஆகியோர் தைலாபுரத்தில் உள்ள டாக்டர் ராமதாஸை சந்தித்து பேசிவிட்டு சென்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடந்த திடீர் சந்திப்பு குறித்து, பாமக தலைமை நிலைய நிர்வாகிகளிடம் கேட்ட போது அவர்கள் தெரிவித்த தகவல்கள்:

‘மாற்றம் , முன்னேற்றம் அன்புமணி’ என்ற முழக்கம் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதன் பின் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி குறித்த பாமக எடுத்த முடிவுகளை இளைஞர்கள் ரசிக்கவில்லை. இப்போது நடைபெறும் போராட்டத்திற்கும் போதிய வரவேற்பு இல்லை. அதிமுக கூட்டணியில் இடம்பெறும் போதே, ‘வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் பாமக இடம்பெற்றது. தற்போது, ஆட்சி முடியும் நிலையிலும் இட ஒதுக்கீடு குறித்து அதிமுக தலைமை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எனவே 20 சதவீத இட ஒதுக்கீடை உடனே வழங்க வேண்டும் என்று ராமதாஸ் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இப்போது இட ஒதுக்கீடு பெறாவிட்டால் எப்போதும் பெற முடியாது என்பதில் பாமக உறுதியாக உள்ளது. இதன் அடுத்தகட்ட போராட் டம் வருகிற 30-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகிறது. ஒருவேளை தனி இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால், ‘தனித்துப் போட்டி’ என்ற நிலையை எடுக்கவும் வாய்ப்புள்ளது.

இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுகதலைவர் ஸ்டாலின், “முக்கிய கட்சி ஒன்று கூட்டணியில் இடம் பிடிக்க உள்ளது” என்று கூறினார்.அதுமுதல் அதிமுக, பாமகவை சந்தேக கண்ணோடு பார்க்கிறது. குருவின் மகன் கனலரசனைவைத்து பாமகவை ‘டார்கெட்’ செய்ய முயற்சித்தால், திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை.

இந்தச் சூழலில் அமைச்சர்கள் அன்பழகனும், வேலுமணியும் ராமதாஸை சந்தித்து கூட்டணி குறித்து பேசியிருக்கின்றனர். இதன் பிறகும் தனிஇட ஒதுக்கீடு குறித்த சாதகமான பதில் வராத நிலையில், வருகிற 31-ம் தேதி நடைபெற உள்ள பாமகவின் இணையவழி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் தன் முடிவை அறிவிப்பார் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in