

ஒருவழிப் பாதையான கோவை நஞ்சப்பா சாலையால், அதற்கு அருகேயுள்ள மாற்றுச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோவை அவிநாசி சாலை, அண்ணா மேம்பாலத்தில் இருந்து நஞ்சப்பா சாலை வழியாக காந்திபுரத்துக்கு வழித்தடம் செல்கிறது. அதேபோல், காந்திபுரத்தில் இருந்து நஞ்சப்பா சாலை வழியாக, அவிநாசி சாலைக்கு வர வழித்தடம் உள்ளது. தினமும் இந்தச் சாலை வழியாக, ஏராளமான வாகன ஓட்டுநர்கள் வந்து செல்கின்றனர். இந்தச் சாலையில் ஏராளமான வர்த்தக மையங்கள் உள்ளன.
குறுகிய சாலையான இந்தச் சாலையில் வாகனங்கள் சென்று வரும்போது, அவிநாசி சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க மாநகரக் காவல்துறையின் சார்பில், நேற்று முதல் மாற்றுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது, அவிநாசி சாலை அண்ணா மேம்பாலத்தில் இருந்து காந்திபுரத்துக்கு வழக்கம்போல் வாகனங்கள் செல்லலாம். ஆனால், காந்திபுரத்தில் இருந்து பார்க் கேட் சிக்னலைக் கடந்து, அவிநாசி சாலைக்கு வாகனங்கள் செல்ல முடியாது. பார்க் கேட் நிறுத்தத்தில் இருந்து, இடது புறம் மத்தியச் சிறைச்சாலை வழியாகத் திரும்பி, ஏ.டி.டி.காலனி சாலை வழியாக எல்.ஐ.சி சந்திப்பை அடைந்து அவிநாசி சாலைக்குச் செல்லலாம். அங்கிருந்து வேண்டிய இடங்களுக்கு வாகனங்கள் திரும்பிக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தால் நஞ்சப்பா சாலையில் வாகன நெரிசல் கடந்த இரு நாட்களாக இல்லை. அதேசமயம், அனைத்து வாகனங்களும் சிறைச்சாலை சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டதால், அந்தச் சாலையில் வாகன நெரிசல் உள்ளது. இந்த மத்திய சிறைச்சாலை சாலை, ஏடிடி காலனி சாலையிலும் ஏராளமான நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன.
மேலும், அந்தச் சாலை இருவழிச் சாலையாகும். வாகனங்கள் தொடர்ந்து இடைவெளியின்றி வருவதால், அங்கு வசிக்கும், பணிக்குச் சென்று வருபவர்கள் சாலையைக் கடக்க பல மணி நேரங்கள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதேபோல், பார்க் கேட் சந்திப்பில் இருந்து இடதுபுறம் சிறைச்சாலை சாலையில் திரும்பும் இலகுரக வாகன ஓட்டுநர்கள், நேரு மைதானத்தை அடைந்து, ஆடிஸ் வீதி வழியாகவும் அவிநாசி சாலைக்குச் சென்று வருகின்றனர். ஆடிஸ் வீதியும் குறுகிய சாலை என்பதோடு, இருபுற வாகனப் போக்குவரத்து உள்ளதாலும், கடந்த இரு நாட்களாக நெரிசலாகக் காணப்படுகிறது.
இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி
இதுதொடர்பாகச் சமூக செயற்பாட்டாளர்கள் ராஜ்குமார், கண்ணன் ஆகியோர் கூறும்போது,‘‘ மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையின் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. அதே சமயம், பார்க் கேட் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பும் வாகனங்களில், இருசக்கர வாகனங்களை மட்டும் நேரு மைதானத்தைக் கடந்து, ஆடீஸ் வீதி வழியாகச் செல்ல அனுமதிக்கலாம். மற்ற இலகுரக, கனரக வாகனங்களை அந்தச் சாலையில் செல்ல விடாமல் தடுத்தால், அங்கு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது,’’ என்றனர்.
தடுப்புகள் அகற்றப்படும்
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையர் முத்தரசு ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘நஞ்சப்பா சாலையில் நடுவில் உள்ள தடுப்புகள் அகற்றப்படும். அப்போது ஒருவழிப் பாதைக்கு சாலை அகலமானதாகக் கிடைக்கும். இதனால் அவிநாசி சாலையில் இருந்து நஞ்சப்பா சாலை வழியாகக் காந்திபுரத்துக்கு வாகனங்கள் நெரிசலின்றி வந்து செல்லலாம்.
அதேபோல், பார்க் கேட் சந்திப்பில் இருந்து நேரு மைதானத்தைக் கடந்து, ஆடீஸ் வீதியில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மட்டும் செல்ல வழிவகை செய்யப்படும். மேற்கண்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.