நெல்லையில் சாலைகளில் உலாவரும் கால்நடைகள்: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

நெல்லையில் சாலைகளில் உலாவரும் கால்நடைகள்: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சாலைகளிலும், வீதிகளும் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து குளறுபடிகளும், விபத்துகளும் நேரிடுகின்றன.

திருநெல்வேலியில் போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலைகள், பாதசாரிகள் நடந்து செல்லமுடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் என்றெல்லாம் போக்குவரத்துக்கு பிரச்னைகள் இருக்கின்றன.

தற்போது சாலைகளிலும், வீதிகளிலும் சர்வசாதாரணமாக சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளும் அத்துடன் சேர்ந்திருக்கிறது.

திருநெல்வேலி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை, வண்ணார்பேட்டை புறவழிச்சாலை, சந்திப்பு பழை பஸ் நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் , டவுன் ரதவீதிகள், பெருமாள்புரம், தியாகராஜநகர், என்.ஜி.ஓ. காலனி, பாளையங்கோட்டை மார்க்கெட், தெற்கு பஜார், வண்ணார்பேட்டை என்று எங்கு பார்த்தாலும் இப்போது மாடுகள் சாலைகளில் முகாமிட்டிரு்பபதை காணமுடிகிறது.

சாலைகளின் நடுவே அவை படுத்திருக்கின்றன. ஆங்காங்கே குப்பை தொட்டிகளில் மேய்கின்றன. மாடுகளின் நடமாட்டத்தால் தற்போது நகரில் போக்குவரத்து பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. பல இடங்களில் தினமும் விபத்துகள் நேரிட்டு வருகின்றன.

வாகனங்கள் மோதுவதால் பலத்த காயமுற்று மாடுகள் அவதியுறுவதும், அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதும்கூட தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது விலங்குநல ஆர்வலர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.

திருநெல்வேலியில் மழை காலங்களில் எல்லாம் மாடுகள் சாலைகளுக்கு வரும் பிரச்சினை நீடிக்கிறது. கடந்த ஆண்டு இவ்வாறு சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடுவோருக்கு அபராதம் விதிப்பது, மாடுகளை பிடித்து கோசாலைகளில் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் கடந்த சில நாட்களுக்குமுன் செய்தியாளர்கள் கேட்டபோது, மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

மாநகர பகுதியில் முக்கிய சாலைகளில் அங்குமிங்கும் மாடுகள் சுற்றித்திரிந்து கொண்டிருபபது வாகன ஓட்டிகளுக்கு அச்சமூட்டுவதாக இருக்கிறது. அவற்றை பிடித்து கோசாலையில் அடைக்கவும், அவற்றின் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in