

கோவையில் ஓராண்டுக்கும் மேலாக நுகர்வோர் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படாததால் அரசுத் துறைகள் மீதான நுகர்வோரின் குறைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு கிடைக்காத நிலை உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
அரசு ஆணைப்படி மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டுக் கூட்டங்களை, நுகர்வோர் தொடர்புடைய அனைத்து அரசுத் துறை மற்றும் துறை சார்ந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு நான்கு முறையாவது நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் தெரிவிக்கும் குறைகள், கோரிக்கைகள் மீது குறைதீர் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் அலுவலகம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால், தமிழகத்தில் கோவை உள்படப் பெரும்பாலான மாவட்டங்களில் ஆண்டுக்கு நான்கு கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்கின்றனர் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர்.
இது தொடர்பாகக் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் என்.லோகு கூறியதாவது:
''கோவையில் கடைசியாக 2019 ஆகஸ்ட் 2-ம் தேதி கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு கூட்டம் நடத்தப்படவில்லை. காலாண்டுக் கூட்டம் நடத்த வேண்டும் என்பது சட்டபூர்வமானது. ஆனால், பல மாவட்டங்களில் முறையான இடைவெளியில் காலாண்டுக் கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் 2013-ல் பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. கூட்டம் நடத்தப்பட்டாலும் அரசுத் துறைகள், துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொள்வதில்லை.
கண்டுகொள்ளப்படாத சுற்றறிக்கைகள்
இது தொடர்பாக, நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அலுவலகம் பல சுற்றறிக்கைகள் அனுப்பியும் அரசுப் போக்குவரத்துக் கழகம், வருவாய், மின்பகிர்மானக் கழகம், தொழிலாளர் நலத்துறை, சட்ட எடையளவு, வட்ட வழங்கல், குடிமைப்பொருள், பள்ளிக் கல்வி, பத்திரப் பதிவு உள்ளிட்ட துறைகள், தன்னார்வ அமைப்புகளுடனான காலாண்டுக் கூட்டங்களை நடத்துவதில்லை. இதனால் தமிழகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான குறைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல இயலாத நிலை உள்ளது. முறையாகக் கூட்டங்கள் கூட்டப்பட்டால்தான் நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு கிடைக்கும்.
எனவே, அரசாணைப்படியும், உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படியும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாவட்ட அளவில் ஒவ்வொரு துறை சார்ந்த தலைவர்களால் தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்புக் குழுக்களுடனான காலாண்டுக் கூட்டம் நடத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டங்கள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்''.
இவ்வாறு என்.லோகு தெரிவித்தார்.