

தேனி மாவட்டம் மேகலை எஸ்டேட் குடியிருப்பில் யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்தார். யானையை விரட்டக்கோரி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் சின்னமனூருக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் மேகமலை அமைந்துள்ளது. இங்குள்ள மேல்மணலாறு பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா(60). தேயிலைத் தோட்ட தொழிலாளி.
இவர் நேறறு இங்குள்ள குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2.25 மணிக்கு அப்பகுதிக்கு வந்த ஒற்றை யானை மரத்தில் இருந்த பலா, மாங்காயைப் பறித்துத் தின்றுள்ளது. குழாயை உடைத்து தண்ணீர் குடித்த யானை வீட்டின் கதவு அருகே உரசியது.
சத்தம் கேட்டு முத்தையா வெளியே வந்துள்ளார். வீட்டின் பக்கவாட்டில் யானை நிற்பதைப் பார்த்து பயந்து போய் உள்ளே செல்ல முயன்றுள்ளார். அப்போது யானை மிதித்து. தந்தத்தால் குத்தியது. இதில் வாசலிலேயே விழுந்து இறந்தார்.
இது குறித்து தொழிலாளர்கள் ஹைவேவிஸ் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் உடலை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கடந்தவாரம் அமாவாசை என்ற தொழிலாளியை யானை தாக்கி கொன்றது. இந்நிலையில் வீட்டிற்கே வந்து இன்னொருவரை கொன்றுள்ள சம்பவம் தொழிலாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
எனவே வேலைக்குப் போகாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். யானையை விரட்ட உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.