

கலப்பட கருப்பட்டி தயாரிப்பு மற்றும் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், உடன்குடி பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 2020 மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தனர்.
விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள 12 வட்டார வேளாண்மை அலுவலகங்களில் இருந்து தங்கள் குறைகள், பிரச்சினைகளை காணொலி காட்சி வாயிலாக எடுத்துரைத்தனர். அவைகளுக்கு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய பதிலை அளித்தனர். கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பேசியதாவது:
பயிர் சேதம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது மாதமாக காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த கூட்டத்தில் விவசாயிகள் 54 கோரிக்கைகளை தெரிவித்தனர். அவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காலத்தில் வருவாய், வேளாண்மை மற்றும் புள்ளியியல் துறையினர் மிக சிறப்பாக பணியாற்றினர். குறிப்பாக விவசாயிகள் அனைவரையும் பயிர் காப்பீடு செய்ய வைப்பதில் சிறப்பாக பணி செய்தனர். அதன் மூலம் 92 சதவீத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
அதுபோல புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்களை உடனடியாக கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேளாண் பயிர்களை பொறுத்தவரை 510.86 ஹெக்டேர் அளவுக்கு சேதமடைந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். அதுபோல தோட்டக்கலை பயிர்களை பொறுத்தவரை 1.296.62 ஹெக்டேர் பரப்பில் ரூ.1.07 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபரம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
கலப்பட கருப்பட்டி:
உடன்குடி வட்டார வேளாண்மை அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பேசிய விவசாயி சந்திரசேகரன், கலப்பட கருப்பட்டி விற்பனையை தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உணவு பாதுகாப்பு துறையினரே கலப்பட கருப்பட்டி தயாரிக்க அனுமதி அளித்துள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதேபோல் உடன்குடியை சேர்ந்த திருநாகரன் என்ற விவசாயி மற்றும் ஒரு வழக்கறிஞரும் இதே கருத்தை வலியுறுத்தினர். உலகளவில் புகழ்பெற்ற உடன்குடி கருப்பட்டி தற்போது கலப்படத்தால் சீரழித்து கிடக்கிறது. கலப்பட கருப்பட்டியால் உடன்குடியின் பெயருக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கலப்பட கருப்பட்டியால் உடல்நலத்துக்கும் கேடு ஏற்படுகிறது. எனவே, கலப்பட கருப்பட்டி விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர் அவர்கள். இதற்கு பதிலளித்த ஆட்சியர் செந்தில் ராஜ், இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் கலந்து பேசி விரைவில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
வெள்ளநீர் கால்வாய் திட்டம்:
சாத்தான்குளத்தை சேர்ந்த மகா.பால்துரை பேசும்போது, கருமேணி ஆற்றில் சாத்தான்குளம் பகுதியில் நீர்தேக்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தாமிரபரணி, நம்பியாறு, கருமேணி ஆறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் மணப்பாடு வரையிலான குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பயிர்கள் சேதம்:
புதூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பேசும்போது, புதூர் பகுதியில் மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டன. அவைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள் மழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்தது குறித்து கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு சார்பில் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டதும், விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
தூத்துக்குடி உப்பாறு ஓடை மீட்புக் குழுவை சேர்ந்த ஜோதிமணி பேசும்போது, தூத்துக்குடி அருகேயுள்ள கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, உமரிக்கோட்டை, அல்லிகுளம் பகுதியில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க சுமார் 3000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளதாக தெரிகிறது.
இதனால் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்படும். விவசாயிகள் வாழ்வாதாரம் இழப்பார்கள். உப்பாறு ஓடை போன்ற நீர்நிலைகள் அழிந்து போகும். எனவே, தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இந்த பகுதியில் அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர்.
இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாயம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தனர். இவைகளுக்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், கோட்டாட்சியர்கள் தனப்பிரியா, விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.