

இளைஞர்களிடம் விளையாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரி முன்பு கால்பந்தாட்ட வீரர் மாரடோனாவின் கேக் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் மட்டும் புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம் பாரதிநகர் ஐஸ்வர்யா பேக்கரியில் கேக் சிலை செய்து மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். கடந்த வருடங்களில் இசைஞானி இளையராஜா, மகாகவி பாரதியார்ஆகியோரது உருவ கேக் சிலையாக வைக்கப்பட்டது.
இந்த ஆண்டு கால்பந்து ஜாம்பவான் அர்ஜெண்டினாவின் மாரடோனாவின் கேக் சிலை நேற்று இன்று முன்பு வைக்கப்பட்டது.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இளைஞர்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காகவும் இந்த கேக் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை முன்பு ரசிகர்கள், பொதுமக்கள், கால்பந்தாட்ட வீரர்கள் நின்று செல்பி எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஐஸ்வர்யா பேக்கரி உரிமையாளர் வெங்கடசுப்பு கூறியதாவது, அர்ஜென்டினாவில் ஒரு சிறிய நகரில் பிறந்து தனது அயராத முயற்சியாலும் தளராத உழைப்பாலும் எண்ணற்ற கோல்களை அடித்து உலகையே அவரை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தார் மாரடோனா.
கிரிக்கெட்டுக்கு ஒரு டெண்டுல்கர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு உசைன் போல்ட், குத்துச்சண்டை க்கு மைக் டைசன் ஆகியோர் வரிசையில், கால்பந்து என்றால் மாரடோனா தான் ஞாபகத்திற்கு வருவார். சென்ற மாதம் இறந்த அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் இளைஞர்கள் மொபைல் போனிலும், கம்ப்யூட்டரிலும் விளையாடாமல் களத்தில் இறங்கி விளையாட வலியுறுத்தியும் இச்சிலையை செய்துள்ளோம்.
நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு விளையாட்டுடன் தொடர்புபடுத்திக் கொண்டால் உடல் நலம் மட்டுமல்ல மன நலனும் உறுதியாகும். மாரடோனா கேக் சிலை 6 அடி உயரத்தில் 60 கிலோ சர்க்கரை மற்றும் 270 முட்டைகளை கொண்டு நான்கு நாட்களில் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.