நவ.25 முதல் டிச.23 வரை லண்டனிலிருந்து சென்னை வந்த 2,724 பயணிகள் கண்காணிப்பு: சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் : கோப்புப்படம்
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் : கோப்புப்படம்
Updated on
2 min read


லண்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த பயணி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியின் மரபணு ஆய்வு முடிவுகள் அடுத்த வாரம் புனே வைரலாஜி நிறுவனம் வழங்கும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. இந்தியாவும் டிசம்பர் 31-ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்கத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் லண்டனில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன் ஏர் இந்தியா விமானம் 266 பயணிகளுடன் டெல்லி வந்து சேர்ந்தது. பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியா வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கண்டிப்பாக ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது.

அதன்பின் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 6 பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு பயணி சென்னையைச் சேர்ந்தவர்.

அவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி புனேயில் உள்ள தேசிய வைராஜி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிட்டனில் உருமாறி கரோனா வைரஸின் மரபணுவோடு ஒத்திருக்கிறதா என ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

லண்டனில் இருந்து திரும்பிய அந்த பயணிக்கு சென்னை கிங்ஸ் இன்ஸ்ட்டியூட் மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர் உடல்நிலை சீராக இருந்து வருகிறது. அவரின் உடலில்இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வரும் 28-ம் தேதிதான் கிடைக்கும் எனத் தெரிகிறது. ஆனால், விரைந்து அனுப்பிவைக்க தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் தொடர்ந்து வைரலாஜி நிறுவனத்துடன் பேசி வருகிறோம். இது மரபணு ஆய்வு என்பதால், பல்வேறு விதமான உருமாற்றங்கள் குறித்து ஆய்வுசெய்ய வேண்டியது இருக்கிறது. ஆய்வுமுறையும் சிக்கலானது, வழக்கமான பிரசோதனை போன்று இருக்காது, இதற்கு அதிகமான காலநேரம் ஆகும்.

பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு ஆன்டி-வைரல்மருந்துகள், ஆன்டி பயோடிக்ஸ் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. மற்றவகையில் வெளிநாட்டில் இருந்துவந்த மற்றவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை.

இந்த பயணியுடன் பயணித்த 15 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அந்த முடிவுகள் வர வேண்டியுள்ளன. மேலும், இந்தப் பயணியுடன் உள்நாட்டு விமானத்தில் பயணித்த 70 பயணிகளும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் மூலம் அந்தப் பயணியின் உடலில் இருக்கும் கரோனா வைரஸின் மரபணு மாதிரியும், லண்டனில் தற்போது இருக்கும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் மாதிரியும் ஒன்றானதா, அல்லது வேறுபட்டதா என அறிய முடியும்.

லண்டனில் இருந்து நவம்பர் 25 ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதிவரை 2,724 பயணிகள் வந்துள்ளார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். சுகாதாரத்துறை, குடிமைப்பணியாளர்கள், போலீஸார் ஆகியோர் இணைந்து இவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பிரிட்டனில் இருந்து இன்று வந்த சரக்கு விமானத்தில் பயணித்த 9 பேருக்கும் கரோனா தொற்று இருந்தது. இதையடுத்து, அவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த சரக்கு விமானம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பட்டுள்ளது. யாரையும் சரக்குகளை இறக்க அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வரும் பயணிகள் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள், கண்காணிக்கப்படுவார்கள்.

வெளிநாட்டு சரக்கு விமானத்தில் இருந்து சரக்குகளை இறக்குவோர், பிபிடி ஆடைகளை அணிந்து சரக்கு இறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரிட்டனைத் தவிர்த்து பிறநாடுகளி்ல் இருந்து 38 ஆயிரம் பயணிகள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரிட்டனில் இருந்து திரும்பியோருக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அவர்களின் முதன்மைத் தொடர்பாளர்களையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in