

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அரசாக அதிமுக விளங்குகிறது, யார் நம்மை ஆள வேண்டும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என, அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (டிச. 24) நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.
வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:
"தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை யாராலும் மறக்க முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தினார்.
அவரை பின்பற்றியே இப்போதைய முதல்வரும் மக்கள் பணி ஆற்றி வருகிறார். மருத்துவப்படிப்பு என்பது பெற்றோர்களின் பெருங்கனவாக இருந்தது. வசதியானவர்களுக்கு மட்டுமே எளிதாக இருந்த மருத்துவப் படிப்பை, சாதாரணமானவர்களுக்கு கிடைக்கும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் தமிழக முதல்வர் பழனிசாமி.
அதனால் தான் இன்று பல ஏழை குடும்பத்து மாணவர்கள் எளிதாக மருத்துவப்படிப்பு பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தாண்டு அரசுப் பள்ளியில் படித்த 327 பேருக்கு மருத்துவக் கல்லூரில் இடம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு இது உயர வேண்டும்.
பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் கூட 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவில்லை. ஆனால், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்துக்கு பெற்று தந்தவர் முதல்வர் பழனிசாமி.
உயர்ரக சிகிச்சை அளிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையும் மதுரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து, எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தார்கள். ஆனால், அதை பொருட்படுத்தாமல் ஏழை மக்களுக்கான ஆட்சியாகவே அதிமுக செயல்பட்டு வருகிறது. இதை மக்கள் உணர வேண்டும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது உயர்கல்வி பெறுவதில் தமிழகம் தான் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்த மாநிலத்தை ஆளுவதற்கு யார் தேவை? ஆள தகுதியானவர்கள் யார்? என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 22 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 2,528 பேருக்கும், அதைத்தொடர்ந்து, ஆம்பூர், ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கும் ரூ.2 கோடியே 22 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புடைய 6,224 சைக்கிள்கள் அந்தந்த பகுதியில் நடந்த விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.